கேரளாவின் பேப்பூர் கடற்கரையில் திங்கட்கிழமை (09) காலை சிங்கப்பூர் கொடியுடன் கூடிய ஒரு கொள்கலன் கப்பல் தீப்பிடித்தது.
இதனால் இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படை (ICG) தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அதில் இருந்த பணியாளர்களை மீட்க மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டதாக கொச்சியில் உள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பேப்பூரில் இருந்து 78 கடல் மைல் தொலைவில், ‘எம்வி வான் ஹை 503’ என்ற கொள்கலன் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டதாக எக்ஸ் இடுகையில் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
270 மீட்டர் நீளமுள்ள இந்தக் கப்பல், கொள்கலன் சரக்குகளையும் மொத்தம் 22 பேர் கொண்ட பணியாளர்களையும் ஏற்றிக்கொண்டு ஜூன் 7 ஆம் திகதி கொழும்பிலிருந்து புறப்பட்டு ஜூன் 10 ஆம் திகதி மும்பையை அடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
எவ்வாறெனினும், தீ விபத்தை தொடர்ந்து, நான்கு பணியாளர்கள் காணாமல் போனதாகவும், 18 பணியாளர்கள் ஒரு படகில் கப்பலை விட்டு வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.
ஐந்து பணியாளர்கள் காயமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
இறுதியாக வெளியான தகவலின்படி கப்பல் இன்னும் தீப்பிடித்து தத்தளித்துக் கொண்டிருந்தது.
மீட்பு மற்றும் தீயணைப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் மேலும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.