அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பட்டுள்ள வன்முறை உச்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், இரவு நேர ஊரடங்கை அமுல்படுத்த அந்நகர மேயர் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கடுமையான குடியேற்ற கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து லொஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்றுவரும் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது.
வெளிநாடுகளில் இருந்து உரிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்கா வந்து வசிப்பவா்களை ட்ரம்ப் தலைமையிலான அரசு வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகிறது. இந்த வெளியேற்றம் சட்டவிரோதமானது என்று கூறி, கலிஃபோர்னியா மாகாணம் லொஸ் ஏஞ்சலீஸ் நகரில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதோடு மோதலில் ஈடுபட்ட பலரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
இப் போராட்டத்தைப் பயன்படுத்திக் கொண்ட சிலர், முகமுடியை அணிந்துகொண்டு ஆப்பிள் ஸ்டோர் மற்றும் வணிக வளாகங்களுக்குள் புகுந்து விலையுயர்ந்த அப்பிள் தொலைபேசிகள், டேப்-லட்கள் ஆகியவற்றை திருடிச்சென்றுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் பல்வேறு கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் உடைக்கப்பட்டதைத் தொடர்ந்து லாஸ் ஏஞ்சலீஸ் மேயர் கரேன் பாஸ் இரவு நேரத்தில் முழுமையான ஊரடங்குப் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து லொஸ் ஏஞ்சலீஸ் நகருக்கு மட்டும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு, தேசிய பாதுகாப்புப் படையினர் மற்றும் கடற்படை காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.