லோர்ட்ஸில் வியாழக்கிழமை (12) தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா தனது ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொண்டது.
அணித் தலைவர் பேட் கம்மின்ஸின் விதிவிலக்கான பந்துவீச்சு செயல்திறன் மற்றும் அலெக்ஸ் கேரியின் முக்கியமான 43 ஓட்டங்கள் மூலம் அவுஸ்திரேலியா தனது இரண்டாவது இன்னிங்ஸில் 73 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்த போதிலும் மீண்டது.
இறுதியில் அவர்கள் போட்டியின் இரண்டாம் நாள் முடிவில் எட்டு விக்கெட் இழப்புக்கு 144 ஓட்டங்களை பெற்றனர்.
இதனால், அவர்கள் 218 ஓட்ட முன்னிலையுடன் உள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் மொத்த எண்ணிக்கை 212 ஓட்டங்களுக்கு பதிலளிக்கும் விதமாக தென்னாப்பிரிக்கா 138 ஓட்டங்களுக்குள் சுருண்டது.
தென்னாப்பிரிக்காவின் தலைவர் டெம்பா பவுமா மற்றும் டேவிட் பெடிங்ஹாம் ஆகியோர் முதல் இன்னிங்ஸில் கணிசமான எதிர்ப்பை வழங்கினர்.
ஐந்தாவது விக்கெட்டுக்கு 64 ஓட்டங்கள் கூட்டாண்மையைப் பகிர்ந்து கொண்டனர்.
பவுமா 36 ஓட்டங்களையும், பெடிங்ஹாம் 45 ஓட்டங்களையும் எடுத்தனர்.
குறிப்பிடத்தக்க வகையில் சிறப்பாக பந்து வீசிய பேட் கம்மின்ஸ் 28 ஓட்டங்களுக்கு ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனுடன் சர்வதேச டெஸ்ட் அரங்கில் 300 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டினார்.
போட்டியின் நேற்றைய இரண்டாவது நாளானது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஓரளவு உதவியாக இருந்தது.
இரு அணிகளிலும் 28 பேர் ஆட்டமிழந்தனர்.
இதனால், முதலில் ஐந்து நாட்களுக்கு திட்டமிடப்பட்டிருந்த இந்தப் போட்டி, மூன்றாம் நாள் முடிவதற்குள் முடிவடைய வாய்ப்புள்ளது.
அவுஸ்திரேலியாவின் இரண்டாவது இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை கட்டுப்படுத்த தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சுத் தாக்குதலுக்கு ககிசோ ரபாடா மற்றும் லுங்கி நிகிடி தலைமை தாங்கினர்.
முதல் இன்னிங்ஸில் ஏற்கனவே 5-51 என்ற கணக்கில் விக்கெட்டுகளை வீழ்த்திய ரபாடா, 3-44 என்ற கணக்கில் தனது வலுவான பந்து வீச்சுத் தாக்குதலை தொடர்ந்தார்.
அதே நேரத்தில் நிகிடி 3-35 என்ற கணக்கில் பங்களித்தார்.
இதனால், அவுஸ்திரேலியா ஒரு கடத்தில் 73 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது.
இருப்பினும், கேரி மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் எட்டாவது விக்கெட்டுக்கு 61 ஓட்ட கூட்டணியைப் பகிர்ந்து கொண்ட பின்னர் மீண்டு வர முயற்சித்தது.
எனினும் கேரி, ரபடாவின் பந்து வீச்சில் 43 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
இறுதியாக இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வர ஸ்டார்க் 16 ஓட்டங்களுடனும், நாதன் லியோன் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இன்று போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் ஆரம்பமாகும்.
அவுஸ்திரேலியா தனது இரண்டாவது இன்னிங்ஸில் இன்னும் இரண்டு விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 218 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.