ஈரானுடனான போர் நிறுத்தத்திற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முன்மொழிவுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் செவ்வாய்க்கிழமை (24) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“பாதுகாப்பில் அளித்த ஆதரவிற்கும், ஈரானிய அணுசக்தி அச்சுறுத்தலை ஒழிப்பதில் பங்கேற்றதற்கும் ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் அமெரிக்காவிற்கு இஸ்ரேல் நன்றி தெரிவிக்கிறது” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எனினும், எந்தவொரு போர்நிறுத்த மீறலுக்கும் இஸ்ரேல் கடுமையாக பதிலடி கொடுக்கும் என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முன்னதாக செவ்வாய்க்கிழமை இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் நிறுத்தம் அமலில் இருப்பதாகவும், ஈரான் ஏவுகணைகளை ஏவிய சில மணி நேரங்களுக்குப் பின்னர், இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை மீற வேண்டாம் என்றும் ட்ரம்ப் கூறினார்.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான ஒரு போர் நிறுத்த ஒப்பந்தத்தை ட்ரம்ப் உலகிற்கு அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பின்னர் இஸ்ரேலிய பிரதமரின் அறிக்கை வந்தது.
ஈரான் அதை முதலில் நிராகரித்தது, பின்னர் போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டது.
ஈரானிய வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி அமெரிக்காவின் போர் நிறுத்தக் கூற்றினை ஆரம்பத்தில் நிராகரித்தார்.
அத்தகைய ஒப்பந்தம் எதுவும் ஒப்புக் கொள்ளப்படவில்லை என்று கூறினார்.
இருப்பினும், அந்த அறிவிப்புக்கு பின்னர், ஈரானிய அரசு தொலைக்காட்சி போர் நிறுத்தம் தொடங்கியதை உறுதிப்படுத்தியது.
















