கொலை உட்பட பல குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சந்தேக நபர் நேற்று (07) கல்முனை பொலிஸ் பிரிவில் கைது செய்யப்பட்டு திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் ஆயுதக் குழுவினால் கொலை, கடத்தல், காணாமல் ஆக்கப்படல், துப்பாக்கிப் பயன்பாடு, சித்திரவதைக் கூடங்களை இயக்குதல் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் ஆகிய குற்றங்களில் ஈடுபட்ட சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக குற்றப் புலனாய்வுத் துறையின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு நடத்திய விசாரணையின் ஒரு பகுதியாக இந்த கைது இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 34 வயதுடைய அக்கரைப்பற்று பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
சந்தேக நபர் 72 மணி நேரம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும், இது தொடர்பான விசாரணைகளை திருக்கோவில் பொலிஸாரும், குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் மேற்கொண்டு வருகின்றனர்.















