பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 25,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்ற முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது.
இந்த வெற்றியுடன் பங்களாதேஷுக்கு எதிரான டி:20 தொடரையும் இலங்கை அணி சிறப்பாகத் தொடங்கியது.
நேற்றிரவு (10) 07.30 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சினை மேற்கொள்ளத் தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய லிட்டன் தாஸ் தலைமையிலான பங்களாதேஷ் அணியினர் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 154 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தனர்.

அணி சார்பில் அதிகபட்சமாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பர்வேஸ் ஹொசைன் எமோன் 38 ஓட்டங்களை எடுத்தார்.
பின்னர், 155 ஓட்டங்கள் என்ற இலக்கை துரத்திய இலங்கை அணியின் தொடக்க ஜோடியான பத்தும் நிஸ்ஸங்க மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் அணிக்கு சரியான அடித்தளத்தை அமைத்தனர்.
முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 78 ஓட்டங்களை விரைவாக சேர்த்து சுமூகமான சேஸிங்கான பாதையை அமைத்தனர்.
பத்தும் நிஸ்ஸங்க 16 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 42 ஓட்டங்களை எடுத்தார்.
அதே நேரத்தில், குசல் மெண்டீஸ் 51 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உட்பட 73 ஓட்டங்கள் எடுத்து இன்னிங்ஸை நங்கூரமிட்டார் – இது அவரது ஏழாவது டி20 அரை சதமாகும்.
இவர்கள் தவிர குசல் ஜனித் பெரேராவின் (24 ஓட்டம்) துடுப்பாட்டமும், அணித் தலைவர் சரித் அசலங்கவின் இறுதி சிக்ஸரும், 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பில் இலங்கைக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தது.
இறுதியாக இலங்கை 159 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கினை கடந்தனர்.
குசல் மெண்டீஸ் போட்டியின் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
இந்த வெற்றியின் மூலம், மூன்று போட்டிகள் கொண்ட டி:20 தொடரில் இலங்கை 1–0 என முன்னிலை வகிக்கிறது.
மேலும் அடுத்த போட்டியில் தனது வேகத்தைத் தக்க வைத்துக் கொள்ள இலங்கை அணி முயற்சிக்கும்.
அதேநேரம், பங்களாதேஷ் மீண்டும் எழுச்சி பெற்று தொடரை உயிர்ப்புடன் வைத்திருக்கும் நோக்கத்துடன் களம் காணும்.
இரண்டாவது டி:20 போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (13) தம்புள்ளையில் ஆரம்பமாகும்.

பவர்பிளேயில் இலங்கை புதிய சாதனை
இந்தப் போட்டியில் முதல் 6 ஓவர்களில் 83 ஓட்டங்களை எடுத்து, டி:20 சர்வதேச போட்டிகளில் இலங்கை அணி தனது அதிகபட்ச பவர்பிளே ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்து புதிய சாதனையாக படைத்தது.
இது மார்ச் 2018 இல் இந்தியாவுக்கு எதிராக அடித்த 75 ஓட்டம் என்ற முந்தைய சிறந்த ஓட்ட எண்ணிக்கயை முறியடித்துள்ளது.




















