சீனாவின் மின்சார வாகன நிறுவனமான BYD, 2026 ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்துக்குள் பாகிஸ்தானில் அசெம்பிள் செய்யப்பட்ட தனது முதல் காரை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
இது, பிராந்தியத்தில் மின்சார மற்றும் பிளக்-இன் ஹைப்ரிட் வாகனங்களுக்கான அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் அமைந்துள்ளது.
ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவையின் அறிக்கையின்படி, BYD தனது உள்நாட்டு சந்தையில் கடுமையான விலைப் போருக்கு மத்தியில் அதன் உலகளாவிய தடத்தை விரிவுபடுத்துவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள புதிய ஆலை, வளர்ந்து வரும் சந்தைகளில் இருந்து அதிகரித்து வரும் தேவையை நிவர்த்தி செய்வது மட்டுமல்லாமல், பாகிஸ்தான் அரசாங்கத்தால் வழங்கப்படும் சலுகைகளையும் கொண்டு அமையும்.
BYD மற்றும் பாகிஸ்தானின் மெகா மோட்டார் நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியான இந்த ஆலை 2025 ஏப்ரல் முதல் கராச்சி அருகே கட்டுமானத்தில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆரம்பத்தில், இந்த ஆலை ஆண்டுக்கு 25,000 யூனிட் வாகனங்களை உற்பத்தித் திறனைக் கொண்டிருக்கும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
எனினும், ஆலை எப்போது முழு திறனை எட்டும் அல்லது எப்போது வெகுஜன உற்பத்தி தொடங்கும் என்பது பற்றி அறிவிக்கப்படவில்லை.
பாகிஸ்தானில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் (மின்னேற்றி) உள்கட்டமைப்பு குறைவாக இருப்பதால், ப்ளக்-இன் கலப்பின வாகனங்கள் மிகவும் நடைமுறை விருப்பமாகக் கருதப்படுகின்றன.
கடந்த 15 ஆம் திகதி பில்லியனர் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக காலடி எடுத்து வைத்து, மும்பையில் அதன் முதல் காட்சியறையை திறந்தது.
நகரின் நிதி மையமான பாந்த்ரா குர்லா வளாகத்தின் (BKC) மையத்தில் அமைந்துள்ள இந்த புதிய டெஸ்லா காட்சியறை 4,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது.
இதன் மூலம் அமெரிக்க மின்சார கார் நிறுவனமான டெஸ்லா நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்திய சந்தையில் நுழைந்தது.
இந்த நிலையில் அதன் போட்டி நிறுவனமான சீனாவின் BYD பாகிஸ்தான் சந்தையில் காலடி எடுத்து வைக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.















