ஜெனரல் இசட் தலைமையிலான போராட்டங்களுடன் தொடர்புடைய அதிகரித்து வரும் அமைதியின்மையை எதிர்கொள்ளும் வகையில் நேபாள இராணுவம் தடை உத்தரவுகளையும் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவையும் விதித்துள்ளது.
புதன்கிழமை (10) நேபாளத்தின் மக்கள் தொடர்பு மற்றும் தகவல் பணியகம் வெளியிட்ட அறிக்கையில், தடை உத்தரவுகள் இன்று மாலை 5:00 மணி வரை அமுலில் இருக்கும் என்றும், அதன் பின்னர் வியாழக்கிழமை (11) காலை 6:00 மணி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் இராணுவம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு நிலைமையைப் பொறுத்து மேலும் முடிவுகள் எடுக்கப்படும் என்றும் இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.
நடந்து வரும் போராட்டங்களின் போது ஏற்பட்ட உயிர் மற்றும் சொத்து இழப்புகளுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்ளும் அதே வேளையில், சட்ட ஒழுங்கைப் பேணுவதில் பொதுமக்களின் ஒத்துழைப்பிற்கு இராணுவம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.
அதேநேரம், சட்டவிரோத தனிநபர்களும் குழுக்களும் போராட்டத்தில் ஊடுருவி, தீ வைப்பு, கொள்ளை, வன்முறைத் தாக்குதல்கள் மற்றும் பாலியல் வன்கொடுமை முயற்சிகள் உள்ளிட்ட ஆபத்தான குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் இராணுவம் எச்சரித்தது.
போராட்டம் என்ற பெயரில் நடத்தப்படும் இதுபோன்ற எந்தவொரு குற்றச் செயல்களும் தண்டனைக்குரிய குற்றங்களாகக் கருதப்படும்.
மேலும் இவ்வாறான அராஜக செயல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இராணுவம் எச்சரித்துள்ளது.
ஊரடங்கு உத்தரவின் போது அம்பியூலன்ஸ்கள், அமரர் ஊர்திகள், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் பயன்படுத்தும் வாகனங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய வாகனங்கள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தேவைப்பட்டால் வசதிக்காக அருகிலுள்ள பாதுகாப்புப் பணியாளர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுமாறு அனைத்து குடிமக்களையும் இராணுவம் கேட்டுக் கொண்டுள்ளது.
நேபாளத்தில் போராட்டங்களின் போது வன்முறை வெடித்த இரண்டு நாட்களுக்குப் பின்னர ஜனாதிபதி ராம் சந்திர பவுடல் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குடிமக்களைச் சந்தித்து, நாட்டில் நடந்து வரும் ஜெனரல் இசட் இயக்கத்திற்கு பேச்சுவார்த்தை மூலம் அமைதியான தீர்வைக் காண முயற்சிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டதை அடுத்து, செவ்வாய்க்கிழமை (10) இரவு பேச்சுவார்த்தைக்கான அழைப்பு வந்தது.
வரி வருவாய் மற்றும் சைபர் பாதுகாப்பு கவலைகளை காரணம் காட்டி, முக்கிய சமூக ஊடக தளங்களுக்கு அரசாங்கம் தடை விதித்ததை அடுத்து, செப்டம்பர் 8 ஆம் திகதி காத்மாண்டு மற்றும் போகாரா, புட்வால் மற்றும் பிர்குஞ்ச் உள்ளிட்ட பிற முக்கிய நகரங்களில் போராட்டங்கள் வெடித்தன.
ஆட்சியில் நிறுவனமயமாக்கப்பட்ட ஊழல் மற்றும் பாரபட்சத்தை முடிவுக்குக் கொண்டுவர போராட்டக்காரர்கள் கோருகின்றனர்.
அரசாங்கம் அதன் முடிவெடுக்கும் செயல்முறைகளில் மிகவும் பொறுப்புணர்வுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்க வேண்டும் என்று அவர்கள் வாதிடுகின்றனர்.
பேச்சு சுதந்திரத்தை நசுக்கும் முயற்சியாக சமூக ஊடக தளங்கள் மீதான தடையை இரத்து செய்ய வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கோருகின்றனர்.
பதட்டங்கள் அதிகரித்ததால், அது வன்முறையாக வெடித்தது.
பாதுகாப்புப் படையினருடனான மோதல்களில் குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 500 பேர் காயமடைந்தனர்.
நிலைமையைக் கட்டுப்படுத்த காத்மாண்டு உட்பட பல நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.














