வடக்கு பிலிப்பைன்ஸ் கிராமங்களில் மூவரின் இறப்புக்கு காரணமாகவும், ஆயிரக்கணக்கான மக்களை வெளியேற்றிய ஒரு சூப்பர் சூறாவளி இப்போது ஹொங்கொங், சீனாவின் தெற்குப் பகுதிகள் மற்றும் தாய்வானை நோக்கி நகர்கிறது.
அங்கு மக்கள் மிகவும் கடுமையான வானிலையை எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர்.
ரகசா புயல் ஹொங்கொங்கிற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது 2017 இல் ஹடோ மற்றும் 2018 இல் மங்குட் ஆகிய புயல்களின் அளவை எட்டக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
ஹொங்கொங்கின் அதிகாரிகள் மூன்றாவது மிக உயர்ந்த புயல் எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
மேலும், குறைந்தது 700 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு இதுவரை மிகவும் சக்திவாய்ந்த புயலாக உருவெடுத்துள்ள இது, அதிகபட்சமாக மணிக்கு 230 கிமீ வேகத்திலும் கடக்கக்கூடும் என்று வானிலையாளர்கள் கூறுகின்றனர்.
அடுத்த 24 மணி நேரத்திற்குள் புயல் அதன் தற்போதைய வலிமையைத் தக்க வைத்துக் கொள்ளும் என்றும், பின்னர் சீனக் கடற்கரையை நெருங்கும்போது சற்று பலவீனமடையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
புயல் தாக்கத்தினால் பிலிப்பைன்ஸில் குறைந்தது மூன்று பேர் இறந்தனர்.
மேலும் சூப்பர் புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பரவலான வெள்ளம், நிலச்சரிவுகள் மற்றும் வீடுகள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியதால் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர்.
ஹொங்கொங் மற்றும் மக்காவ்வில் பாடசாலைகள் மூடப்பட்டன, குடியிருப்பாளர்கள் மளிகைப் பொருட்களை சேமித்து வைத்தனர்.
அருகிலுள்ள சீன தொழில்நுட்ப மையமான ஷென்சென் 400,000 மக்களை வெளியேற்ற உத்தரவிட்டுள்ளது.





















