பாகிஸ்தான், இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகள் பங்கேற்கும் வரவிருக்கும் டி20 முத்தரப்பு தொடருக்கான திருத்தப்பட்ட அட்டவணையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) இன்று வெளியிட்டது.
திருத்தப்பட்ட அட்டவணையின்படி, இறுதிப் போட்டி உட்பட ஏழு டி:20 போட்டிகளும் இப்போது ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும்.
அடுத்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் டி:20 உலகக் கிண்ணத்துக்கான முக்கிய ஆயத்தமாகக் கருதப்படும் இந்தத் தொடர், முதலில் லாகூரில் ஐந்து போட்டிகளைக் கொண்டிருந்தது.
முத்தரப்புத் தொடரின் தொடக்க ஆட்டம் நவம்பர் 18 அன்று பாகிஸ்தான் மற்றும் சிம்பாப்வே இடையே நடைபெறும்.
முத்தரப்பு தொடர்பில் ஒவ்வொரு அணியும் நான்கு போட்டிகளில் பங்கேற்கும்.
அதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் நவம்பர் 29 அன்று திட்டமிடப்பட்ட இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மீதமுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கான திருத்தப்பட்ட அட்டவணையை PCB தலைவர் மொஹ்சின் நக்வி அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பின்னர் இந்த அட்டவணை வந்துள்ளது.
திருத்தப்பட்ட அட்டவணையை அறிவித்த PCB தலைவர், பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மீதமுள்ள ஒருநாள் போட்டிகள் நவம்பர் 14 மற்றும் 16 ஆகிய திகதிகளில் ராவல்பிண்டியில் நடைபெறும் என்று கூறினார்.
செவ்வாய்க்கிழமை இஸ்லாமாபாத்தில் நடந்த தற்கொலைக் குண்டுவெடிப்பில் 12 பேர் கொல்லப்பட்டு 27 பேர் காயமடைந்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தைத் தொடர்வதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) உறுதிப்படுத்தியதை அடுத்து, புதிய அட்டவணைகள் வந்தன.
ஒரு அறிக்கையில், எந்தவொரு வீரரும் இலங்கைக்குத் திரும்ப விரும்பினால், தொடர் எந்த இடையூறும் இல்லாமல் தொடர்வதை உறுதி செய்வதற்காக வீரர்கள் மாற்றப்படுவார் என்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தெளிவுபடுத்தியது.


















