நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை பேரிடரில் பாதிக்கப்பட்ட கேகாலை மாவட்டத்திற்கு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் நேற்றையதினம் (06) விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்.
இதன் போது தான் பிரதிநிதித்துவப்படுத்தும் இரத்தினபுரி மாவட்டத்தின் கொடக்கவெல, இறக்குவானை போன்ற பிரதேசத்திலிருந்து பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் 170 பொதுமக்கள் கடந்த மூன்று தினங்களாக யட்டியாந்தோட்டை நகர், பொதுமக்கள் வீடுகள் ஆகியவற்றை தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகளையும் பார்வையிட்டார்.
மேலும் யட்டியாந்தோட்டை நகரம், கராகொட போன்ற இடங்களில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்ததுடன் அம்மக்களுடன் கலந்துரையாடி இருந்தார் .
ஹலகொல்ல தோட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற நிலச்சரிவினால் ஹலகொல்ல தமிழ் வித்தியாலயத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ள மக்களையும் சந்தித்ததுடன் , அண்மையிலே ஏற்பட்ட கனமழையினால் வீடுகளை இழந்த யட்டியாந்தோட்டை லெவன்ட் தோட்டம், புலத்கொஹூபிட்டிய களுபான ,தேதுகல போன்ற தோட்ட பிரதேசங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகளையும் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையங்களையும் பார்வையிட்டிருந்தார்.
அதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்து மக்களுக்கான வீடுகளை விரைவாக பெற்று தருவதற்கான நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்ததோடு வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற மானியங்களை உரிய கிராம சேவகர் ஊடாக பிரதேச செயலாளர்கள் நாடி அவற்றை விரைவாக பெற்றுக் கொள்ளுமாறு பிரதி அமைச்சர் அவர்கள் வேண்டுகோளையும் விடுத்திருந்தார்.
இதேவேளை, , புலத்கோஹபிட்டிய தேதுகலை , லக்கி லேண்ட் கிங்ஸ் லேண்ட் போன்ற தோட்டப்புறங்களுக்கு செல்லும் பிரதான வீதி பாரிய மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து முற்றாக தடைப்பட்டிருந்த நிலையில் தற்போது கேககாலை மாவட்ட வீதி போக்குவரத்து அதிகார சபையும், இலங்கை ராணுவம் ஒன்றிணைந்து வீதியை மீள் நிர்மாணிக்கும் வேலைதிட்டத்தினை பார்வையிட்டதுடன். அவற்றை விரைவாக செய்து முடிப்பதற்கான கலந்துரையாடலினையும் மேற்கொண்டிருந்தார்.












