நபர் ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டிருந்த ஐந்து சந்தேக நபர்களை மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு கைது செய்துள்ளது.
கடந்த டிசம்பர் 06 ஆம் திகதி தெஹிவளை, வனரத்ன வீதியில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு அருகில் நடந்த குற்றத்திற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக தெஹிவளையிலேயே இந்தக் கொலைச் சதித் திட்டம் திட்டமிடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த குற்றத்தில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார், மற்றொருவர் படுகாயமடைந்தார்.
அதன்படி, ஒருவரைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டுதல், அந்தக் குற்றத்திற்கு உதவுதல் மற்றும் தூண்டுதல், சட்டவிரோதமான அத்துமீறிய கும்பலின் உறுப்பினர்களாகச் செயல்படுதல் ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக குறித்த ஐவரும் இரத்மலானை பகுதியில் நேற்று (10) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் 22 முதல் 36 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர்கள் பன்குலம, ரத்மலானை, பொரலஸ்கமுவ மற்றும் மொரட்டுவை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
பன்குலம பகுதியைச் சேர்ந்த சந்தேக நபரை கைது செய்தபோது, அவரிடம் இருந்து 15 கிராம் ஹெராயின் கைப்பற்றப்பட்டது.
இந்த சந்தேக நபர் 2025 ஜனவரி 19 ஆம் திகதி கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவின் படோவிட்ட பகுதியில் நடந்த கொலையில் துப்பாக்கிதாரியாக செயல்பட்டதாகவும், அந்த கொலையில் ஒரு குடியிருப்பாளர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், அந்தக் குற்றம் தொடர்பான வழக்கு தற்போது கல்கிஸ்ஸை நீதிவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் வெளிப்படுத்திய மேலதிக தகவல்களின் அடிப்படையில், திட்டமிட்ட குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரு மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்ட உரிமத் தகடு ஹோமாகம பொலிஸ் பிரிவில் இருந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிளின் சொந்தமானது என்பது கண்டறியப்பட்டது.
சந்தேக நபர்கள் இன்று (11) கல்கிஸ்ஸை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னலைப்படுத்தப்பட உள்ளனர்.
அதே நேரத்தில் மேற்கு மாகாண தெற்கு குற்றப்பிரிவு மேலும் விசாரணைகளை தொடர்கிறது.















