டிட்வா புயலால் ஏற்பட்ட மண்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இறந்த அல்லது காணாமல் போன நபர்களின் இறப்புகளைப் பதிவுசெய்வதற்குத் தேவையான சட்ட விதிகள் செயற்படுத்தப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகத் திணைக்களம் அறிவித்துள்ளது.
பேரிடரின் விளைவாக ஒரு நபர், உறவினர் அல்லது நெருங்கிய நண்பர் காணாமல்போனதாக அறிவித்தால், அத்தகைய காணாமல்போனவர்களின் இறப்புகளை அதிகாரபூர்வமாக பதிவுசெய்வதற்கான சட்ட நடவடிக்கைகள் நிறுவப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு திணைக்களத்தால் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
திணைக்களத்தின் அறிவித்தலின்படி, தேசிய பேரிடர் பகுதிகள் மற்றும் நிர்வாக மாவட்டங்களில் இறப்புகளைப் பதிவுசெய்வதற்கான தற்காலிக ஏற்பாடுகள் தொடர்புடைய சட்டத்தின்படி டிசம்பர் 02 அன்று வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.
இந்த விதிகளின் கீழ் காணாமல்போனவரின் மரணத்தைப் பதிவுசெய்வதற்குத் தேவையான தகவல்களைக்கொண்ட விண்ணப்பப் படிவம், உண்மைகளை உறுதிப்படுத்தும் பிரமாணப் பத்திரத்துடன், அந்த நபர் கடைசியாக வசித்த பகுதியின் கிராம அலுவலரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கிராம அலுவலர் விண்ணப்பத்தை பிரதேச செயலாளருக்கு அனுப்பவேண்டும்.
பின்னர், கோரிக்கை பொதுமக்களின் ஆட்சேபனைகளுக்காக இரண்டு வாரங்களுக்கு பிரதேச செயலகம் மற்றும் அந்தந்த கிராம அலுவலர் அலுவலகம் இரண்டிலும் காட்சிப் படுத்தப்படும்.
எந்த ஆட்சேபனையும் எழுப்பப்படாவிட்டால், பிரதேச செயலாளர் விண்ணப்பத்தை அங்கீகரிக் கப்பட்ட மண்டலத்துக்குப் பொறுப்பான உதவி அல்லது உதவிப் பதிவாளர் நாயகத்திடம் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிப்பார்.
ஆட்சேபனைகள் எழும் சந்தர்ப்பங்களில், பொருத்தமான நடவடிக்கை எடுப்பதற்கு முன் விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் வருகைப் பதிவுச் சான்றிதழ்கள் தொடர்பான கோரிக்கைகளுக்கு, அதே நடைமுறையின்கீழ் விண்ணப்பங்களை ஏற்றுக்கொண்டு, முறையான விசாரணைகளை நடத்தி, அதற்கேற்ப சான்றிதழ்களை வழங்குமாறு பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் பதிவாளர் நாயகம் திணைக்களம் மேலும் குறிப்பிடடுள்ளது.
















