மட்டக்களப்பு பாலமீன்மடு பிரதேசத்தில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு தெரிவித்து பாதிக்கப்பட்ட மக்கள் கிராம உத்தியோகத்தருக்கு எதிராக நேற்று (13) போராட்டத்தில் ஈடுபட முயற்சித்தனர்.
இந்த நிலையில் தையிட்டி பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் தலையீடு செய்து எதிர்வரும் வெள்ளிக் கிழமைக்கு முன்னர் நிவாரணம் வழங்குவதாக உறுதி மொழி வழங்கியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிலுள்ள பாலமீன்மடு கிராம சேவகர் பிரிவில் 410 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் வெள்ள அனர்த்தத்தினால் இந்த பகுதியில் வீடுகளுக்குள் வெள்ள நீர் உட்புகுந்ததுடன் பலத்த சேதமடைந்து உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்திருந்தனர்.
இவ்வாறான நிலையில் பதில் கடமையாற்றி வந்த கிராம உத்தியோகத்தர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு சென்று பார்வையிட்டு இருந்த போதும் அந்த பகுதி மாநகர சபை உறுப்பினர் ஒருவரின் சிபார்சில் 26 பேருக்கு மட்டும் வீடு பாதிப்புக்கு 25 ஆயிரம் ரூபாவும் நிவாரணம் வழங்கியுள்ளார் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
உண்மையில் பாதிக்கபட்டவர்களுக்கு வழங்கவில்லை என தெரிவித்து நீதி கோரி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட கிராம அபிவிருத்தி சங்க கட்டிட பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்று திரண்டனர்.
இதையடுத்து கிராம உத்தியோகத்தர் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் சகிதம் சென்று அங்கு கூடியிருந்த மக்களிடம் கலந்துரையாடல் இடம்பெற்றது.
அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் , நிவாரண விடயத்தில் கிராம உத்தியோகத்தர் பிழையாக செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்து தமக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் இல்லாவிடில் பிரதேச செயலகத்தை முற்றுகையிடும் போராடுவோம் எனவும் தெரிவித்து தீர்வு வழங்குமாறு கோரினர்.
இந்நிலையில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிர்வரும் வெள்ளிக் கிழமைக்கு முன்னர் நிவாரணம் வழங்குவதாக உறுதி மொழியை அடுத்து மக்கள் வெள்ளிக்கிழமை நிவாரணம் வழங்காவிட்டால் தாம் பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு மக்கள் அங்கிருந்து வெளியேறினர்.















