எனது நண்பரான உளவளத் துணை ஆலோசகர் ஒருவர் அடிக்கடி ஒரு மேற்கோளை சுட்டிக்காட்டுவார்…”எதிர்த் தரப்பு உங்களை கோபப்படுத்தி விட்டதென்றால் அது அதன் முதலாவது வெற்றியைப் பெற்றுவிட்டது என்று பொருள்”
ஒருவர் உங்களை கோபப்படுகிறார் என்றால், உங்களைக் கோபப்படுத்துவது தான் அவருடைய நோக்கம் என்றால், நீங்கள் கோபப்படாமல் இருப்பதுதான் அவரைத் தோல்வி அடையச் செய்யும். நீங்கள் கோபப்பட்டீர்கள் என்றால், கோபத்தில் வார்த்தைகளைக் கொட்டி விட்டீர்கள் என்றால், எதிரி நினைப்பதை நீங்கள் செய்கிறீர்கள் என்று பொருள்.
இது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களுக்கும் பொருந்தும். ஓர் அரசியல் செயற்பாட்டாளர் முகநூலில் எழுதுகின்றார்..மருத்துவர் அர்ஜுனா அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலின் கருவி என்று. ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் அபிவிருத்தி தொடர்பான சீரியஸான உரையாடல்களை திசை திருப்பி, தனிநபர் தாக்குதல்கள், குழப்பங்கள்,மோதல்கள் போன்றவற்றின் மூலம் முடிவுகளை எடுக்க விடாமல் தடுப்பதுதான் அர்ஜுனாவுக்கு வழங்கப்பட்ட வேலை என்றும். அந்த வேலையை அவர் திறம்படச் செய்கிறார் என்றும்….
இது ஒரு சதிக் கோட்பாடு.இக்கட்டுரை எப்பொழுதும் சதி,சூழ்ச்சிக் கோட்பாடுகளை எடுத்த எடுப்பில் நம்புவதில்லை. மருத்துவர் அர்ஜுனா யாருடைய கருவி என்பதை விடவும் முக்கியமானது, ஆழமானது எதுவென்றால், அவர் உங்களைக் கோபப்படுத்தும்போது நீங்கள் எப்படிப் பொறுமையாக இருக்கிறீர்கள் என்பதுதான். நீங்கள் கோபப்பட்டு அவரைப்போலவே தகாத வார்த்தைகளை பயன்படுத்துகிறீர்களா இல்லையா என்பதுதான்.நீங்கள் கோபப்படுவதன்மூலம் அவரை வெற்றி அடைய வைக்கிறீர்களா இல்லையா என்பதுதான்.
இது அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல,அரசு நிர்வாகிகளுக்கு குறிப்பாக அர்ஜுனா அடிக்கடி நோண்டும் மருத்துவத்துறை சார்ந்தவர்களுக்கும் பொருந்தும்.அவர் உங்களிடமிருந்து கோபமான பதிலை,எதிர்வினையை எதிர்பார்க்கிறார் என்றால் நீங்கள் கோபப்படாமல் இருப்பதுதான் உங்களுடைய முதிர்ச்சி;பக்குவம். ஏன் அதுதான் உரிய உபாயமும் கூட.
ஆனால் கடந்த ஓராண்டு காலத்துக்கு மேலாக நடைபெறும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களைப் பார்த்தால் யாரும் நிதானமாக இருப்பதாகத் தெரியவில்லை. சில சமயங்களில் ஆளுநரும் அரச அதிபரும் சாட்சிகளாக இருக்கிறார்கள்.அவர்கள் வாயைத் திறக்க விரும்பவில்லை. அவர்கள் அரச ஊழியர்கள். அரசியல்வாதிகளின் சண்டைகளுக்குள் வாயை கொடுத்து பதவியை கெடுத்துக் கொள்ள அவர்கள் தயாரில்லை. ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் ஆளுநரும் அரச அதிபரும் அமைதியாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு, சில சமயங்களில் சிரிப்பையும் அடக்கிக் கொண்டு, சென் பௌத்த ஞானிகள் போல சாட்சிகளாக இருக்கிறார்கள்.
அப்படி நமது அரசியல்வாதிகளும் இருந்தால் என்ன?அரசாங்கம் அபிவிருத்திக் குழுக் கூட்டங்களை குழப்புவதற்காகத்தான் இப்படிப்பட்ட வேலைகளை பின்னிருந்து ஊக்கிவிக்கின்றது என்று கூறுவோமாக இருந்தால், அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள் தொடர்பாக தமிழ் கட்சிகள் அனைத்தும் இணைந்து ஒரு முடிவுக்கு வரலாம்.அதை மக்களுக்கு வெளிப்படுத்தலாம்.அதை அரசாங்கத்துக்கு ஒரு முறைப்பாடாகத் தெரியப்படுத்தலாம்.
இங்கு பிரச்சினையாக இருப்பது அர்ச்சுனா மட்டுமல்ல.அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும்தான்.”இப்படிப்பட்ட குழப்பங்கள், கோளாறுகள் சிங்களப் பகுதிகளில் இல்லை.குறிப்பாக யாழ்ப்பாணத்து ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில்தான் இவை காணப்படுகின்றன…” என்று கூறிய ஓய்வு பெற்ற மூத்த நிர்வாகி ஒருவர்,அபிவிருத்திக் குழுக் கூட்டங்களுக்குள் யாருடைய கமராவை அனுமதிப்பது என்ற முடிவை எடுப்பதன்மூலம் இந்தக் குழப்பங்களை உடனடியாகத் தடுக்கலாம் என்று.
ஆனால் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் மட்டுமல்ல,ஆளுநரும் அடிக்கடி அரச ஊழியர்களை,நிர்வாகிகளைக் குற்றம் சாட்டுகிறார்.சில சமயங்களில் எச்சரிக்கின்றார்.இதன் மூலம் “தமிழ் அரச நிர்வாகிகளில்தான் தவறு உண்டு, அரசாங்கத்தில் இல்லை”என்ற ஒரு தோற்றம் வெற்றிகரமாகக் கட்டி எழுப்பப்படுகிறது.
ஆளுநர் யார்? அவர் அரசாங்கத்தின் பிரதிநிதி.அவர் தன்னுடைய அதிகாரங்களைப் பயன்படுத்தி தனக்குக் கீழே வேலை செய்யும் நிர்வாகிகளை மாற்றலாம் தண்டிக்கலாம்.ஆனால் அவர் அப்படிச் செய்வதை விடவும் அதிகமாக அரச நிர்வாகிகளைக் குறை கூறுகிறார் என்பதுதான் கடந்த பல மாத கால அவதானிப்பு ஆகும்.
இவ்வாறு தமிழ் அதிகாரிகளை தமிழ் மக்களுடைய பிரதிநிதிகளோடு மோத விடுவது;தமிழ் மக்கள் பிரதிநிதிகள் தங்களுக்கு இடையே மோதிக் கொள்வது; தங்களுடைய அபிவிருத்தியைத் தீர்மானிக்கும் கூட்டங்களை தமிழ் மக்கள் நகைச்சுவை காட்சிகளாகப் பார்ப்பது….போன்றவற்றின் மூலம் தமிழ் அரசியலின் சீரியஸைக் குறைத்து அதை ஒரு பகிடியாக்கி விடுவது என்பது ஒரு நிகழ்ச்சி நிரலாக இருக்க முடியும்.
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் குழப்பப்படுவதற்கு அல்லது கோமாளிக் கூத்துகளாக மாற்றப்படுவதற்கு பின்வரும் காரணங்கள் கூறப்படுகின்றன.
முதலாவது காரணம் ஏற்கனவே இக்கட்டுரையில் கூறப்பட்டது போல அரசாங்கத்தின் சூதான ஒரு நிகழ்ச்சி நிரல்.
இரண்டாவது காரணம், ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத் தலைவர்களின் ஆளுமை குறைவு.
மூன்றாவது காரணம்,அர்ஜுனாவும் உட்பட சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபை நாகரீகத்தைப் பேணாமை.
நான்காவது காரணம், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்துக்குள் கமராக்கள் அனுமதிக்கப்படுவது.அல்லது அங்கே நடக்கும் விவாதங்களை சில ஊடகவியலாளர்கள் வணிக நோக்கு நிலையில் இருந்து கையாள்வது.
இதில் முதலாவதாகக் கூறப்படுவது ஒரு சூழ்ச்சிக் கோட்பாடு.ஆனாலும் தமிழர்களைத் தமிழர்களோடும் மோத விடுவதன்மூலம் தமிழ்த் தேசிய அரசியலை மதிப்பிறக்கம் செய்ய விரும்புகின்றவர்கள் தமிழ் மக்கள் மத்தியில் இருந்து சிலரை அவர்களுக்குத் தெரிந்தோ தெரியாமலோ கையாள முடியும் என்ற சந்தேகம் பலமாக உண்டு.
அரசாங்கத்தின் சதி சூழ்ச்சிகள் என்பவற்றிற்கும் அப்பால்,அவ்வாறு அரசாங்கத்தால் கையாளப் படத்தக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் இப்பொழுது தமிழ் மக்கள் மத்தியில் உண்டு என்பது தமிழ் அரசியல் வீழ்ச்சியைக் காட்டுவது. தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேவையான முதிர்ச்சியோடும் பக்குவத்தோடும் இல்லை என்பதுதான் இங்கு முதலாவது காரணம்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் ஆளுமை எதுவென்பதல்ல இங்கு பிரச்சனை.தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆளுமை எதுவென்பதுதான் இங்கு முதல் பிரச்சினை.
தமிழ்த் தேசிய அரசியல் அவ்வாறு சீரழிந்து போனதுக்கு எல்லாத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் பொறுப்பேற்க வேண்டும். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொருத்தமான முடிவுகளை எடுக்கத் தவறியதன் விளைவாக தமிழ் மக்கள் தொடர்ந்து தோற்றுக் கொண்டிருக்கிறார்கள்.கடந்த 16 ஆண்டுகளாக தமிழ் மக்களை தோற்கடிப்பது வெளித் தரப்புகள் என்பதை விடவும், தமிழ்த் தரப்பே என்பதுதான் உண்மை.
தமிழ் மக்கள் தங்களை ஒரு தேசிய இனம் என்று அழைத்துக் கொண்டாலும், நடைமுறையில் அவர்கள் ஒரு தேசமாக இருக்கிறார்களா என்ற பாரதூரமான கேள்வியை இங்கே எழுப்ப வேண்டும். ஒரு தேசத்துக்குரிய கூட்டுணர்வோ சகோதரத்துவமோ தமிழ் மக்கள் மத்தியில் உண்டா? ஒருவர் மற்றவரை துரோகியாக்குவது; ஒருவர் மற்றவருக்கு “பார்” பட்டம் சுட்டுவது;ஒருவர் மற்றவரை வெளிநாட்டுப் புலனாய்வு நிறுவனங்களின் முகவர் என்று முத்திரை குத்துவது; ஒரு கட்சிக்குள்ளேயே இரு குழுக்கள் பிரிந்து நின்று ஒன்று மற்றதை அவதூறு செய்வது; யாராவது சமூகத்தில் மினுங்கிக் கொண்டு எழுந்தால், யாராவது சமூகத்துக்கு நல்லதைச் செய்ய முயற்சித்தால், அல்லது நல்லதை சொல்ல முயற்சித்தால்,அவரைச் சந்தேகிப்பது;அவரை அவதூறு செய்வது;வசை பாடுவது; சிறுமைப்படுத்துவது… இப்படியே தமிழ் மக்கள் ஒருவர் மற்றவரை நம்பாமல், ஒருவர் மற்றவரை சந்தேகித்து, ஒருவர் மற்றவரைத் துரோகியாக்கி, ஒருவர் மற்றவரை சிறுமைப்படுத்திச் சீரழிய,தமிழ் சமூகத்தில் யாருமே கதாநாயகர்களாக எழ முடியாமல் போய்விட்டது.
தாங்கள் வாக்களித்த தலைவர்களையே ஒரு சமூகம் சந்தேகிக்கின்றது; அவதூறு செய்கிறது என்று சொன்னால்,அது அந்த சமூகத்தின் வீழ்ச்சியைக் காட்டுகிறது.தான் வாக்களித்த ஒரு தலைவரைப் பார்த்து ஒரு சமூகம் சிரிக்கிறது என்று சொன்னால் அந்தச் சமூகம் தன்னுணர்வை,கூருணர்வை இழந்து வருகிறது என்று பொருள்.இவ்வாறு தமிழர்கள் ஒருவர் மற்றவரைத் துரோகியாக்கிக் கொண்டிருக்க,யாருமே கதாநாயகர்களாக எழமுடியாத தோல்விகரமான ஒரு வெற்றிடத்தில்,தென்னிலங்கையிலிருந்து அனுர குமார திஸநாயக்க கதாநாயகராக இறக்கப்படுகிறார்.தமிழ்ப் பாடல்களின் பின்னணியில் அவர் நாயக நடை போடுகிறார். அனுரவைப் போல நாயக வலம் வரும் தமிழ்த் தலைவர் யாராவது உண்டா? ஏன் இல்லாமல் போனது?
எல்லாத் தோல்விகளுக்கும் எதிரியைப் பழி செல்வதும்,சூழ்ச்சிக் கோட்பாடுகளை உற்பத்தி செய்வதும் ஒரு வழக்கமாகப் போய்விட்டது. நாங்கள் எங்கே பிழை விட்டோம்? நாங்கள் எங்கே தேசமாக இல்லாமல் போனோம்? என்பதனை தமிழ்த் தரப்பு தன்னைத்தானே சுய விமர்சனம் செய்து கொள்ள வேண்டும்.
இது தமிழ் மக்கள் தங்களை தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம். சில நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கட்சிகளையும் திட்டிக் கொண்டிருப்பதனால் பிரச்சனை தீராது.உள்ளதில் பெரிய கட்சி கடந்த ஓராண்டு காலப் பகுதிக்குள் எதையுமே கற்றுக்கொள்ளவில்லை என்பதைத்தான் கரைத்துறைப் பற்று பிரதேச சபையில் ஏற்பட்ட தோல்வி காட்டுகிறது.ஒரு தேசமாகத் திரட்டப்படாத மக்கள் சிதறிக் கொண்டே போகிறார்கள்.சிரிப்புக்கிடமாகி விட்டார்கள். அடுத்த ஆண்டாவது தமிழ் மக்கள் தங்களைப் பார்த்து தாங்களே சிரிக்காத ஒரு ஆண்டாக மலராதா?















