வயது மூப்பினால் நீண்டகாலம் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பங்களாதேஷின் முதல் பெண் பிரதமர் கலீதா ஜியா (Khaleda Zia) தனது 80 ஆவது வயதில் காலமானார்.
20 ஆண்டுகளுக்குப் பின்னர் நாட்டின் முதல் ஜனநாயகத் தேர்தலில் தனது கட்சியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற பிறகு, 1991 ஆம் ஆண்டு கலீதா ஜியா பங்களாதேஷின் முதல் பெண் அரசாங்கத் தலைவராக ஆனார்.
திங்களன்று அவரது உடல்நிலை “மிகவும் மோசமாக” இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
அவருக்கு உயிர்காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன.
எனினும், அவரது வயது மற்றும் ஒட்டுமொத்த உடல்நலக் குறைவு காரணமாக ஒரே நேரத்தில் பல சிகிச்சைகளை வழங்குவது சாத்தியமில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.
கலீதா ஜியாவின் உடல்நிலை மோசமாக இருந்தபோதிலும், பெப்ரவரியில் எதிர்பார்க்கப்படும் பொதுத் தேர்தலில் அவர் போட்டியிடுவார் என்று அவரது கட்சி முன்னதாகவே கூறியிருந்தது.
பஙளோதேஷ் முன்னாள் ஜனாதிபதி ஜியாவுர் ரஹ்மானின் மனைவியாக ஜியா முதன்முதலில் பொது மக்களின் கவனத்திற்கு வந்தார்.
1981 ஆம் ஆண்டு இராணுவ சதியில் ஜியாவுர் ரஹ்மான் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஜியா அரசியலில் நுழைந்து பின்னர் பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியை வழிநடத்தும் பொறுப்பினை ஏற்றார்.
1996 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக ஒரு சில வாரங்கள் மட்டுமே நீடித்த பின்னர் ஜியா, 2001 ஆம் ஆண்டு மீண்டும் பிரதமர் பதவிக்கு வந்தார்.
2006 ஒக்டோபரில் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பதவி விலகினார்.
ஊழல் குற்றச்சாட்டுகளாலும், கடந்த ஆண்டு பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அவாமி லீக் தலைவர் ஷேக் ஹசீனாவுடனான நீண்டகால அரசியல் போட்டியாலும் அவரது அரசியல் வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
குறிப்பாக 2018 ஆம் ஆண்டு ஹசீனாவின் நிர்வாகத்தின் கீழ் ஜியா ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டார்.
தான் செய்த குற்றத்தை ஜியா மறுத்து, குற்றச்சாட்டுகள் அரசியல் ரீதியாக உள்நோக்கம் கொண்டவை என்றும் கூறினார்.
பங்களாதேஷில் நடந்த அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்கள் ஹசீனாவை பதவி கவிழ்த்து, நாடுகடத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளான சிறிது நேரத்திலேயே, கடந்த ஆண்டு அவர் விடுதலை செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.















