எதிர்வரும் 2026 ஐசிசி டி20 உலகக் கிண்ணத்துக்கான தற்காலிக 15 பேர் கொண்ட அணியை இங்கிலாந்து அறிவித்துள்ளது.
ஆச்சரியப்படும் விதமாக தேசிய அணிக்காக இன்னும் ஒரு வரையறுக்கப்பட்ட ஓவர் போட்டியில் கூட விளையாடாத வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் டோங்குவை தங்கள் டி20 உலகக் கிண்ண அணியில் இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் சேர்த்துள்ளது.
டி20 உலகக் கிண்ணத்துக்கான அணியுடன் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ECB) ஜனவரி-பெப்ரவரி மாதங்களில் இலங்கைக்கு வெள்ளை பந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அணியையும் அறிவித்துள்ளது.
டி20 உலகக் கிண்ணத்துக்கான அணியின் தலைவராக ஹாரி புரூக் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேநேரம், இங்கிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் டோங்குவை 15 பேர் கொண்ட அணியில் சேர்த்துள்ளது.
குறிப்பிடத்தக்க வகையில், டோங்கு இங்கிலாந்து அணிக்காக எட்டு டெஸ்ட் போட்டிகளில் மாத்திரமே விளையாடியுள்ள நிலையில், அவர் இன்னும் தனது நாட்டிற்காக ஒரு டி-20 அல்லது ஒருநாள் போட்டியில் கூடப் பங்கேற்கவில்லை.
நடந்து வரும் ஆஷஸ் தொடரின் அண்மைய பொக்ஸிங் டே டெஸ்டில் அவரது ஆட்ட நாயகன் சாதனைக்குப் பின்னர் உலகக் கிண்ண அணியில் டோங்கு சேர்க்கப்பட்டுள்ளார்.
மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (MCG) அவரது பந்துவீச்சு தாக்குதலானது 2011 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அவுஸ்திரேலிய மண்ணில் இங்கிலாந்துக்கு முதல் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது.
பொக்ஸிங் டே டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 45 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 44 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தியருந்தார்.
21 ஆம் நூற்றாண்டில் மெல்போர்னில் நடந்த பொக்ஸிங் டே டெஸ்டில் ஐந்து விக்கெட்டுகள் எடுத்த முதல் இங்கிலாந்து பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் அவர் இதன்போது பெற்றார்.

அதேநேரம், டி20 உலகக் கிண்ணத்துக்கு முந்தைய இலங்கை சுற்றுப்பயண அணியிலும் டோங்கு சேர்க்கப்பட்டுள்ளார்.
குறிப்பிடத்தக்க வகையில், இந்த ஆண்டு தி ஹண்ட்ரட் தொடரில் டோங்கு அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக இருந்தார்.
லீக்கில் வெறும் ஆறு போட்டிகளில் 11.07 சராசரியுடன் 14 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இவர் தவிர இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரும் உலகக் கிண்ண அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆனால் இலங்கை சுற்றுப்பயண அணியில் அவர் இல்லை.
மூன்றாவது மற்றும் நான்காவது ஆஷஸ் டெஸ்டில் இருந்து விலகியிருந்த அவர் பக்கவாட்டுத் தசை காயத்தில் இருந்து மீண்டு வருகிறார்.
மறுபுறம், பிரைடன் கார்ஸ் இலங்கைக்கு எதிரான டி20 போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியில் இடம்பிடித்தார்.
ஆனால், அவர் உலகக் கிண்ண அணியில் சேர்க்கப்படவில்லை.
குறிப்பிடத்தக்க வகையில், அதிரடி ஆட்டக்காரர் லியாம் லிவிங்ஸ்டோன் டி20 உலகக் கிண்ண அணியிலோ அல்லது இலங்கை சுற்றுப்பயணத்திற்கான அணியிலோ இடம் பெறவில்லை.
ஜனவரி 22 ஆம் திகதி தொடங்கும் இலங்கை சுற்றுப்பயணத்தில் இங்கிலாந்து அணி மூன்று ஒருநாள் போட்டிகளிலும், பின்னர் மூன்று டி20 போட்டிகளிலும் விளையாடும்.
பின்னர் இங்கிலாந்து அணி பெப்ரவரி 8 ஆம் திகதி நேபாளத்திற்கு எதிரான ஆட்டத்துடன் 2026 டி20 உலக் கிண்ணப் பயணத்தை ஆரம்பிக்கும்.


















