களுத்துறை, நாகொடை போதனா வைத்தியசாலையில் இன்று (31) காலை நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர் “ராஜாவத்தே சத்துவா” என அழைக்கப்படும் நாராயணகே திலிப் சதுரங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் தொடர்பான குற்றத்துக்காக கடந்த டிசம்பர் 13 ஆம் திகதி களுத்துறை தெற்கு பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டார்.
பின்னர் களுத்துறை நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைவாக விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
டிசம்பர் 29 ஆம் திகதி தடுப்புக் காவலில் இருந்தபோது சிறைக் கைதிகள் குழுவால் அந்த நபர் தாக்கப்பட்டார்.
அதைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக நாகொடை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இன்று துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில் பாதிக்கப்பட்டவர் சிறை அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ் வைத்தியசாலையின் விடுதி எண் 14 இல் சிகிச்சை பெற்று வந்தார் – அவரது கால்கள் விலங்குகளால் கட்டப்பட்டிருந்தன.
காலை 6:00 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் ரிவால்வரைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடத்த களுத்துறை குற்றப்பிரிவு, பொலிஸ் விசேட அதிரடிப் படை(STF), குற்ற காட்சி புலனாய்வு (CSI) மற்றும் தடயவியல் குழுக்கள் பணியமர்த்தப்பட்டுள்ளன.

















