அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படும் ஒருவரை கணக்காய்வாளர் நாயகமாக நியமிப்பதற்கு ஜனாதிபதி மேற்கொண்டுள்ள சூழ்ச்சியினை முறியடிப்பதற்கான இயலுமை, எதிர்க்கட்சி தலைவருக்கு உள்ளதாக பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர்,
கணக்காய்வாளர் நாயகத்தினை நியமிக்காமல் ஜனாதிபதி அந்த செயற்பாடை ஜனவரி மாதம் வரை காலதாமதப்படுத்தியுள்ளார்.
தற்போதுள்ள அரசியலமைப்பு பேரவையின் சுயாதீன உறுப்பினர்கள் மூவரின் பதவிக்காலம் ஜனவரி மாதத்துடன் நிறைவடைகிறது.
எனவே அந்த காலப்பகுதியின் பின்னர் தமது கையாட்களை நியமித்து தமது தேவைக்கேற்ப செயற்படும் ஒருவரை கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு நியமிப்பதற்கு ஜனாதிபதி எதிர்ப்பார்த்துள்ளார்.
இதனை நாம் கடந்த 6 மாதங்களுக்கு முன்னரே ஊடகங்களில் பகிரங்கப்படுத்தியிருந்தோம்.
ஆனால் ஜனாதிபதியின் இந்த சூழ்ச்சியை முறியடிப்பதற்கான சந்தர்ப்பம் எதிர்க்கட்சி தலைவருக்கு உள்ளது.
அரசியலமைப்பின் பிரகாரம், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைந்தாலும்.
புதிய உறுப்பினர் ஒருவரை நியமிக்கும் வரை அவர்கள் அந்த பதவியில் நீடிக்கலாம்.
இந்த இடத்தில் எதிர்க்கட்சி தலைவர் செய்ய வேண்டிய கடமை ஒன்று உள்ளது.
அரசியலமைப்பு பேரவைக்கு பிரதமரினால் முன்மொழியப்படும் தேசிய மக்கள் சக்தியின் கையாட்களின் பெயர்களுக்கு இணக்கப்பாட்டினை வெளிப்படுத்தாமல் இருக்க வேண்டும்.
ஏnனில் அரசியலமைப்பு பேரவைக்கு நியமிக்கப்படும் சுயாதீன உறுப்பினர்கள் பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவரின் இணக்கப்பாட்டுடனேயே நியமிக்கப்பட வேண்டும்.
எனவே அரசியலமைப்பு பேரவைக்கு பிரதமரினால் முன்மொழியப்படும் பெயர்களை எதிர்க்கட்சி தலைவர் நிராகரிக்கும் பட்சத்தில் ஜனாதிபதியின் சூழ்ச்சியினை முறியடிக்க முடியும்.
கடந்த சந்தர்ப்பங்களிலும் அரசியலமைப்பு பேரவைக்கு உறுப்பினர்களை தெரிவு செய்யும் நடவடிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டது.
எனவே இம்முறையும் அவ்வாறே செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் அரசியலமைப்பு பேரவைக்கு யோசனை முன்வைத்திருந்த போதிலும் அரசாங்கம் அதனை செய்யவில்லை.
அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று அரசியலமைப்பு பேரவைக்கு நியமிக்கப்படும் சுயாதீன உறுப்பினர்கள் பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவரின் இணக்கப்பாட்டுடனேயே நியமிக்கப்பட வேண்டும் என்ற முறைமை அவ்வாறே பின்பற்றப்படுமாயின் தேசிய மக்கள் சக்தியின் கையாட்கள் அன்றி நேர்மையாக சுயாதீனமாக செயற்படக்கூடியவர்கள் அரசியலமைப்பு பேரவைக்கு நியமிக்கப்படுவார்கள்.














