கிரீன்லாந்தை கையகப்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்கள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விவாதித்து வருவதாகவும், அதில் இராணுவத்தைப் பயன்படுத்துவதும் அடங்கும் என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
நேட்டோ உறுப்பு நாடான டென்மார்க்கின் அரை தன்னாட்சிப் பகுதியான கிரீன்லாந்தை கையகப்படுத்துவது “தேசிய பாதுகாப்பு முன்னுரிமை” என்று வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது.
ஆர்க்டிக் தீவிற்கான ட்ரம்பின் லட்சியங்களுக்கு எதிராகப் போராடி வரும் டென்மார்க்கிற்கு ஆதரவாக ஐரோப்பியத் தலைவர்கள் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்ட சில மணி நேரங்களுக்குப் பின்னர் வெள்ளை மாளிகையின் இந்த அறிக்கை வந்தது.
பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்காவிற்கு கிரீன்லாந்து அசியம் என்று ட்ரம்ப் வார இறுதியில் மீண்டும் மீண்டும் கூறினார்.
இதனிடையே, அமெரிக்காவின் எந்தவொரு தாக்குதலும் நேட்டோவின் முடிவைக் குறிக்கும் என்று டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் எச்சரித்தார்.
நேட்டோ என்பது அட்லாண்டிக் எல்லை தாண்டிய இராணுவக் குழுவாகும், அங்கு வெளிப்புறத் தாக்குதல்கள் ஏற்பட்டால் நட்பு நாடுகள் ஒருவருக்கொருவர் உதவுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செவ்வாயன்று, ஆறு ஐரோப்பிய நட்பு நாடுகள் டென்மார்க்கிற்கு ஆதரவைத் தெரிவித்தன.
கிரீன்லாந்து அதன் மக்களுக்கு சொந்தமானது, மேலும் டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து மட்டுமே தங்கள் உறவுகள் தொடர்பான விடயங்களில் முடிவு செய்ய முடியும் என்று இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, போலந்து, ஸ்பெயின் மற்றும் டென்மார்க் தலைவர்கள் ஒரு கூட்டு அறிக்கையில் தெரிவித்தனர்.

















