தம்புள்ளையில் நேற்றிரவு (08) நடைபெற்ற முதல் டி:20 போட்டியில் பாகிஸ்தான் அணி இலங்கையை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
129 என்ற இலகுவான இலக்கினை துரத்திய பாகிஸ்தான் அணியானது 16.4 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியை பதிவு செய்தது.
இந்த வெற்றியுடன் மூன்று போட்டிகள் கொண்டி டி:20 கிரிக்கெட் சல்மான் அஹா தலைமையிலான பாகிஸ்தான் அணி 1:0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.
தம்புள்ளை ரங்கிரி மைதானத்தில் நேற்றிரவு 07.00 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியானது முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை இலங்கைக்கு வழங்கியது.
அதன்படி, துடுப்பெடுத்தாடிய தசூன் ஷானக்க தலைமையிலான அணியானது, 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 128 ஓட்டங்களுக்குள் சுருண்டது.
இலங்கை அணி சார்பில் ஜனித் லியனகே மாத்திரம் அதிகபடியாக 31 பந்துகளில் 40 ஓட்டங்களை எடுத்தார்.
ஏனைய வீரர்கள் சொல்லும் அளவுக்கு பிரகாசிக்கவில்லை.
பந்து வீச்சில் பாகிஸ்தான் சார்பில் சல்மான் மிர்சா மற்றும் அப்ரார் அஹமட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், மொஹமட் வசிம் மற்றும் ஷதாப் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
129 எடுத்தால் வெற்றி என்ற இலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்ப வீரர்களான சாஹிப்சாதா ஃபர்ஹான் (51) மற்றும் சைம் அயூப் (24) ஆகியோர் நல்லதொரு இணைப்பாட்டத்தை வழங்கினர்.
இதனால், பாகிஸ்தான் அணி 5 ஓவர்களில் 50 ஓட்டங்களை கடந்தது.
அத்துடன் இறுதியாக 16.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 129 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது.
உஸ்மான் கான் 7 ஓட்டத்துடனும் ஷதாப் கான் 18 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
போட்டியின் ஆட்டநாயகனாக ஷதாப் கான் தெரிவானார்.
இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி20 போட்டியானது நாளை (09) இதை மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்கத்கது.
















