தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது, இன்று (10) அதிகாலை 04.00 மணி அளவில் திருகோணமலையிலிருந்து வடகிழக்கு திசையில் சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து இன்று காலை 5.30 மணியளவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, இன்றைய பகல் வேளையில் திருகோணமலைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் இலங்கைக் கடற்கரையூடாகக் கடந்து செல்ல அதிக வாய்ப்புள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் வடக்கு பகுதியில் மேகமூட்டமான வானம் காணப்படும்.
வட மாகாணத்திலும் புத்தளம், அனுராதபுரம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
வட மாகாணத்தின் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
குருநாகல், பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
வட மாகாணத்தில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடிய பலத்த காற்றுடன், அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடிய பலத்த காற்றும் ஏற்படக்கூடும்.
வடமேல் மாகாணத்திலும் மாத்தளை, திருகோணமலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.












