விசா இன்றி வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் வசதியின் அடிப்படையில் ஆண்டுதோறும் வெளியிடப்படும் ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு (Henley Passport Index) – 2026 பட்டியலில், சிங்கப்பூர் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டாக முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
இந்த பட்டியலின்படி, சிங்கப்பூர் குடிமக்கள் விசா இல்லாமல் 193 நாடுகளுக்குப் பயணம் செய்யும் உரிமையை பெற்றுள்ளனர்.
உலகளாவிய பயண சுதந்திரத்தில் இது மிக உயர்ந்த நிலையாகக் கருதப்படுகிறது.
இதேவேளை, 2-வது இடத்தில் ஜப்பான் மற்றும் தென்கொரியா காணப்படுகிறது.
ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு 2026 பட்டியலில் ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளின் பாஸ்போர்ட்டுகள் இரண்டாவது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளன.
இந்த நாடுகளின் குடிமக்கள் விசா இன்றி பெரும்பாலான உலக நாடுகளுக்குப் பயணிக்க முடியும்.
3-வது இடத்தில் ஐரோப்பிய நாடுகள் காணப்படுகின்றன.
டென்மார்க், ஸ்பெயின், சுவீடன் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் மூன்றாவது இடத்தில் உள்ளன.
இந்நாடுகளின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 186 நாடுகளுக்கு விசா இன்றி பயணம் செய்ய முடியும்.
அமெரிக்கா 10-வது இடத்திற்கு சரிவினை எட்டியுள்ளது.
ஒரு புள்ளி சரிவுடன், அமெரிக்கா இந்த ஆண்டு பட்டியலில் 10-வது இடத்தில் உள்ளது.
அமெரிக்க பாஸ்போர்ட் மூலம் 179 நாடுகளுக்கு விசா இன்றி பயணம் செய்ய இயலும் என ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு தெரிவிக்கிறது.
இதேவேளை, இந்தியாவின் நிலையை பார்க்கும்போது 85-வது இடத்தைப் பெற்றுள்ளது.
இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் குறைந்த எண்ணிக்கையிலான நாடுகளுக்கே விசா இன்றி பயணம் செய்ய முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இலங்கையின் நிலையை பார்க்கும்போது உலகளாவிய ரீதியில் 93 ஆவது இடத்தில் உள்ளது.
இது இலங்கை பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு 39 நாடுகளுக்குக் விசா இல்லாமல் அல்லது விசா- ஒன் அரைவல் (visa-on-arrival) முறையிலேயும் பயணம் செய்யும் உரிமையை வழங்குகிறது.
உலகளாவிய அரசியல், இராஜதந்திர உறவுகள் மற்றும் குடிவரவு கொள்கைகள் போன்றவை பாஸ்போர்ட் தரவரிசையில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதையும் இந்த ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு 2026 பட்டியல் வெளிப்படுத்துகிறது.














