முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட சிலாவத்தை தெற்கு தியோகுநகர் மற்றும் தீர்த்தக்கரைப் பகுதியில் வீதிகள் சீரின்றிக்காணப்படுவதால் அவ்வீதிகளைப் பயன்படுத்தும் பொதுமக்கள் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருகின்றனர்.
இந்நிலையில் அப்பகுதிமக்களின் முறையீட்டிற்கமைய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நிலமைகளை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
குறிப்பாக முல்லைத்தீவு – கொக்கிளாய் பிரதானவீதியிலிருந்து தியோகுநகர் ஊடாக தீர்த்தக்கரைவரை செல்லும் தாமரைக்குள வீதி சீரின்றிக்காணப்படுவதால் அப்பகுதியிலுள்ள 350இற்கும் மேற்பட்ட குடும்பங்களும், பாடசாலை மணவர்கள், மீனவர்கள், கடலுணவுகளை கொள்வனவுசெய்வதற்காக வருகைதரும் வியாபாரிகள் எனப் பலரும் போக்குவரத்து இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருவதாக இதன்போது அப்பகுதி மக்களால் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
அதுதவிர சிலாவத்தை தெற்கு மற்றும் தீர்த்தக்கரையிலுள்ள உள்ளகவீதிகள், அனர்த்தம் ஏற்பட்டால் கிராமத்தைவிட்டு வெளியேறும் வீதிகள் என அனைத்து வீதிகளும் சீரின்றிக்காணப்படுவதாகவும் இதன்போது அப்பகுதி மக்கள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரியப்பட்டுத்தினர்.
இதேவேளை கள்ளப்பாட்டிலிருந்து தீர்த்தக்கரையூடாக தூண்டாய்வரை கடற்கரையூடாகச் செல்லும் வீதி தீர்த்தக்கரைப் பகுதியில் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுக் காணப்படுகின்றது.
இதனால் அவ்வீதியைப்பயன்படுத்தும் பொதுமக்கள், கடற்றொழிலாளர்கள் எனப் பலரும் பாதிக்கப்பட்டுவருகின்றனர். இந்நிலையில் குறித்த வீதியின் பாதிப்புநிலமைகளையும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது பார்வையிட்டார்.
இவ்வாறாக குறித்த வீதிகளின் பாதிப்புநிலமைகளைப் பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர், குறித்த வீதிகளின் சீரமைப்புத் தொடர்பில் தம்மால் கூடிய கவனம் செலுத்தப்படுமெனத் தெரிவித்தார்.













