வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஆம் ஆண்டில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, கடந்த ஆண்டில் இறக்குமதி செய்யப்பட்ட மொத்த பயணிகள் வாகனங்களில் 10 சதவீதம் மின்சார வாகனங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புள்ளிவிரங்கள் மற்றும் சந்தை தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டில் 64,556 சிற்றூந்துகள் மற்றும் SUVகள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. இவற்றில் 6,439 வாகனங்கள் முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் எனவும் மொத்த இறக்குமதியில் 18,709 வாகனங்கள் கலப்பின வாகனங்கள் என்றும் குறிப்பிடப்படுகின்றது.
ஆண்டின் தொடக்கத்தில் அதிக விலை கொண்ட சொகுசு மின்சார வாகனங்களுக்கு அதிக தேவை இருந்தபோதிலும், நான்காவது காலாண்டில், மக்களின் கவனம் மலிவு விலையில் உள்ள மின்சார வாகனகள் பக்கம் திரும்பியுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்தநிலையில் 2026 ஆம் ஆண்டில் நடுத்தர அளவிலான சிற்றூந்து வாங்குபவர்களிடையே மின்சார வாகனங்களும் பிரபலமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், இந்தப் போக்கை மேலும் முன்னேற்றுவதற்கு, நாட்டில் வலுவான மின்னேற்றும் உள்கட்டமைப்பை நிறுவுவது அவசியம் என்று வலியுறுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.















