சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய வருடத்திற்கான முதலாவது மாதாந்த அலுவலக ஒன்றுகூடல், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் தலைமையில், அலுவலக ஊழியர்களின் பங்கேற்புடன் அலுவலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் உரையாற்றிய சுகாதார வைத்திய அதிகாரி, இவ்வருடத்திற்கான திட்டங்கள் தொடர்பாக விளக்கமளித்ததுடன், வினைத்திறன் மற்றும் செயல்திறனுடன் கடமைகளை நிறைவேற்ற அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். மேலும், கடந்த காலங்களில் சிறப்பாக சேவையாற்றிய அலுவலக உத்தியோகத்தர்களை அவர் பாராட்டினார்.
அத்துடன், ஒவ்வொரு உத்தியோகத்தரும் தங்களது மாதாந்த அறிக்கைகளை அடுத்த மாதம் 05ஆம் திகதிக்கு முன்னர் கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.
மேலும், இவ்வாரம் குஷ்ட நோய் (Leprosy) விழிப்புணர்வு வாரம் என்பதனால், அதனை மையமாகக் கொண்டு உத்தியோகத்தர்களுக்கு தேவையான சுகாதார விழிப்புணர்வும் வழங்கப்பட்டது.
இவ்வொன்று கூடலுக்கு கல்முனை பிராந்திய மாவட்ட மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகரும் கலந்து கொண்டார். அவர் தனது உரையில், தற்காலத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருவதைக் குறிப்பிட்டதுடன், எதிர்காலத்தில் கள ஆய்வுகளை மேலும் தீவிரப்படுத்துமாறு உத்தியோகத்தர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
இந்த மாதாந்த ஒன்று கூடல், உத்தியோகத்தர்களிடையே ஒருமைப்பாடு, பொறுப்புணர்வு மற்றும் சுகாதார சேவை மேம்பாட்டை உறுதி செய்யும் வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.




















