மேற்கு வங்காளத்தில் இரண்டு நிபா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் இருந்து கொடிய நிபா வைரஸ் பரவுவதற்கான ஆபத்து குறைவாக உள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) இன்று (30) தெரிவித்துள்ளது.
இதனால், எந்தவொரு வர்த்தக அல்லது பயண கட்டுப்பாடுகளையும் பரிந்துரைக்கவில்லை என்றும் உலக சுகாதார ஸ்தாபனம் ஒரு அறிக்கையல் உறுதிபடுத்தியது.
ஹொங்கொங், தாய்லாந்து, தாய்வான், மலேசியா, சிங்கப்பூர், வியட்நாம் மற்றும் நேபாளம் உள்ளிட்ட பல நாடுகள் நிபா வைரஸ் தொற்றுகள் குறித்த அறிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக கொவிட் பாணி சுகாதார பரிசோதனை நடவடிக்கைகளை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் இந்த அறிக்கை வந்துள்ளது.
மேற்கு வங்காளத்தில் இந்த மாதம் இரண்டு நிபா வைரஸ் தொற்றாளர்கள் இந்தியாவால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.
நோயாளிகள் இருவரும் 25 வயது தாதியர்கள் ஆவர்.
ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் தாதியர்களான அவர்கள் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பராசத்தில் உள்ள ஒரே தனியார் வைத்தியசாலைகளில் பணிபுரிகின்றனர்.
2025 டிசம்பர் மாத கடைசி வாரத்தில் அவர்களுக்கு நிபா வைரஸ் தொற்று அறிகுறிகள் தோன்றின, அது விரைவாக நரம்பியல் சிக்கல்களாக மாற்றமடைந்து 2026 ஜனவரி தொடக்கத்தில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
பின்னர் ஜனவரி 13 ஆம் திகதி புனேவில் உள்ள தேசிய வைரஸ் ஆய்வு நிறுவனத்தால் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
ஜனவரி 21 ஆம் திகதி நிலவரப்படி, ஆண் நோயாளி குணமடைந்து வருவதாகவும், பெண் நோயாளி இன்னும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கை மேலும் கூறியது.

















