வெடிபொருட்களாக மாற்றக்கூடிய பொருட்களைச் சேமித்து வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒன்டாரியோவைச் சேர்ந்த மூன்று நபர்கள், ட்ரோன் தாக்குதல்களைத் தடுப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ராணுவ அமைப்பின் உற்பத்திக்காக நிதி திரட்டி வந்ததாகத் தெரியவந்துள்ளது.
ஜெர்ரி டோங் (Jerry Tong), ஸெகுன் வாங் (Zekun Wang) மற்றும் ஃபே (பிராங்க்) ஹான் (Fei Han) ஆகிய மூவரும் இந்தத் திட்டத்தை விளம்பரப்படுத்துவதற்காக காணொளிகளை உருவாக்கியுள்ளனர்.
ஒரு பிக்கப் டிரக்கின் பின்புறத்தில் வைத்து எடுத்துச் செல்லக்கூடிய அளவிலான ஒரு கருவியை அந்த காணொளிகளில் அவர்கள் காண்பித்துள்ளனர்.
இதில் 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 25 அன்று பதிவேற்றப்பட்ட மிக சமீபத்திய காணொளியை அந்நாட்டு ஊடகமான CBC நியூஸ் ஆய்வு செய்துள்ளது.
“சிறிய மற்றும் மிகச்சிறிய ஆளில்லா வான்வழி அமைப்புகளை (Drones) கண்டறிந்து முறியடிக்கக்கூடிய, குறைந்த செலவிலான நடமாடும் அமைப்பை நாங்கள் உருவாக்கி வருகிறோம்,” என்று ‘MORSLAB Pitch Presentation’ என்ற வீடியோவில் டோங் எனும் இளைஞர் கூறுகிறார்.
கைக்குண்டுகள் மற்றும் சிறிய வெடிபொருட்களுடன் வரும் ஆயுதமேந்திய ட்ரோன்களைத் தடுக்கும் சவாலை தாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் அதில் விளக்குகிறார்.
இந்த மூவருடன் ஃபெய்யாங் (அஸ்ட்ரிட்) ஜி (Feiyang Ji) என்ற பெண்ணும் விசாரணையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த ஜனவரி 24 ஆம் திகதி அன்று வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் (Western University) அனுமதியின்றி நுழைந்ததாக வந்த புகாரைத் தொடர்ந்தே இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.
இதனைத் தொடர்ந்து லண்டன் (ஒன்டாரியோ), ஆர்லியன்ஸ் மற்றும் கியூபெக் ஆகிய இடங்களில் உள்ள வீடுகளில் பொலிஸார் பல நாட்கள் சோதனை நடத்தினர்.
இந்நிலையில் இந்தக் குழுவினர் மீது கட்டுப்படுத்தப்பட்ட துப்பாக்கிகளை வைத்திருத்தல்,
துப்பாக்கிகளைத் தயாரித்தல், அதிவேக வெடிபொருட்கள் மற்றும் அவற்றை உருவாக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனங்களை வைத்திருத்தல் போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.














