மகளிர் பிரீமியர் லீக்கில் (WPL) டெல்லி கேபிடல்ஸ் (DC) அணி நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட மகிழ்ச்சியான முடிவை அடைய இன்னும் ஒரு சீசன் காத்திருக்க வேண்டியிருக்கும்.
ஏனெனில் WPL இறுதிப் போட்டியில் தொடர்ச்சியாக நான்காவது தோல்வியை சந்தித்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் தலைமையிலான அணிக்கு மீண்டும் ஒரு முறை மனவேதனை ஏற்பட்டது.
வதோதராவில் வியாழக்கிழமை (05) நடைபெற்ற 2026 WPL இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ரேயால் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது (RCB) முதலில் துடுப்பெடுத்தாடுமாறு டெல்லி அணியை பணித்தது.
அதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லியும் அணித் தலைவலர் ஜெமிமா ரோட்ரிக்ஸின் அபார சதம் (37 பந்துகளில், 57 ஓட்டங்கள்) லாரா வால்வார்ட் (25 பந்துகளில், 44 ஓட்டம்) மற்றும் சினெல்லே ஹென்றி (15 பந்துகளில் 35 ஓட்டம்) ஆகியோரின் அதிரடியுடன் நான்கு விக்கெட் இழப்புக்கு 203 ஓட்டங்களை குவித்தது.

எனினும், முதல் இன்னிங்ஸில் ஒரு அபாரமான துடுப்பாட்ட முயற்சியை வெளிப்படுத்தி, WPL இறுதிப் போட்டியில் இதுவரை பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையை (203/4) பதிவு செய்த போதிலும், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அதிரடியால் தனது இரண்டாவது பட்டத்தை வென்றதன் மூலம் டெல்லி அணி பரிதாபமாக தோல்வியை தழுவியது.
அணித் தலைவர் ஸ்மிருதி மந்தனா (41 பந்துகளில் 87 ஓட்டம்) மற்றும் ஜோர்ஜியா வால் (54 பந்துகளில் 79 ஓட்டம்) ஆகியோரின் அதிரடியான துடுப்பாட்டம் பெங்களுரு அணிக்கு சேஸிங்கில் மிகப்பெரிய அளவில் பங்காற்றியது.

அவர்கள் டெல்லி பந்துவீச்சு தாக்குதலைத் தகர்த்து, மிகப்பெரிய மேடையில் சாதனை புத்தகங்களை மாற்றி அமைத்தனர்.
இந்த ஜோடி இடைவிடாத அதிரடி துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி WPL வரலாற்றில் அதிகபட்ச வெற்றிகரமான ஓட்ட சேஸிங்கைப் பதிவு செய்தது.
இரண்டாவது விக்கெட்டுக்காக 92 பந்துகளில் 165 ஓட்டங்களை குவித்த அவர்களின் மகத்தான கூட்டணி, போட்டியின் வரலாற்றில் மிக உயர்ந்த இணைப்பாட்டமாக அமைந்தது.
ஒட்டுமொத்தமாக பெங்களூரு அணி 19.4 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றி இலக்கினை அடைந்தது.
அவர்களின் வெற்றியின் மூலம் மூன்று ஆண்டுகளுக்குள் IPL மற்றும் WPL கிண்ணங்களை வென்ற முதல் அணி என்ற தனித்துவமான பெருமையையும் பெங்களூரு பெற்றது.
இன்னிங்ஸில் மந்தனா வெறும் 23 பந்துகளில் தனது வேகமான WPL அரைசதத்தை எட்டினார், அதே நேரத்தில் வால் 37 பந்துகளில் தனது மைல்கல்லை எட்டினார்.
தனது அற்புதமான இன்னிங்ஸின் போது, WPL வரலாற்றில் 1,000 ஓட்டங்களை நிறைவு செய்த ஐந்தாவது வீராங்கனை என்ற பெருமையையும் மந்தனா பெற்றார்.
மேலும் 377 ஓட்டங்களுடன் இந்த சீசனில் அதிக ஓட்டம் எடுத்த வீராங்கனையாக இந்திய அணித் தலைவர் ஹர்மன்ப்ரீத் கவுரை முந்தினார்.
போட்டியின் ஆட்டநாயகியாக மந்தனா தெரிவானார், அதேநேரம் தொடரின் ஆட்டநாயகியாக சோஃபி டெவின் தெரிவானார்.














