20 மில்லியன் ரூபா பெறுமதியான ‘குஷ்’ என்ற போதைப்பொருளை நாட்டிற்கு கடத்த முயன்ற குற்றச்சாட்டில் பயணி ஒருவர் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், மன்னார் பகுதிக்கு போதைப்பொருட்களை கொண்டு செல்வதற்காக நீர்கொழும்பில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடிக்கு அருகில் மேலும் இரண்டு நபர்கள் காத்திருந்தது தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி, கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் (PNB) அதிகாரிகள் இன்று (06) காலை இரண்டு சந்தேக நபர்களையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட விமானப் பயணி மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் என்றும், அவர் அடிக்கடி வெளிநாடுகளுக்குச் செல்லும் ஒரு தொழிலதிபர் என்றும் பொலிஸார் விசாரணைகளில் கண்டறிந்தனர்.
அவர் இன்று (06) அதிகாலை 12.35 மணியளவில் தாய்லாந்தின் பேங்கொக்கில் இருந்து தாய் ஏர்வேஸ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தநை்தார்.
விசாரணையில், சந்தேக நபர் 2 கிலோகிராம் 116 கிராம் எடையுள்ள ‘குஷ்’ என்ற போதைப்பொருளின் இரண்டு பாக்கெட்டுகளை, ஒரு லக்கேஜ் பெட்டிக்குள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மொத்த பெறுமதி 21.16 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
மன்னார் பகுதியைச் சேர்ந்த மற்ற இரண்டு சந்தேக நபர்களில், அந்தப் பகுதியில் பணிபுரியும் 43 வயதுடைய தொழில்நுட்ப வல்லுநரும், 36 வயதுடைய ஒருவரும் அடங்குவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் இன்று (06) நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் மேலதிக விசாரணைக்காக முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.
உள்ளனர் என்று போலீசார் மேலும் தெரிவித்தனர்.












