நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விகாரைகளில் உள்ள புத்தர் சிலைகளின் நெற்றியில் பதிக்கப்பட்டிருந்த தங்க முலாம் பூசப்பட்ட கலசங்களைத் திருடிய இரண்டு சந்தேக நபர்களை நாவலப்பிட்டி பொலிசார் கைது செய்துள்ளனர்.
நாவலப்பிட்டி, கெட்டபுலாவ பகுதியில் உள்ள விகாரை ஒன்றில், முச்சக்கர வண்டியில் சென்ற இருவர், புத்தர் சிலையின் நெற்றியிலிருந்த தங்க முலாம் பூசப்பட்ட கலசத்தைத் திருடும் காட்சிகள் அங்கிருந்த பாதுகாப்பு கேமராவில் பதிவாகியிருந்தன.
இதனை ஆதாரமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இரண்டு சந்தேக நபர்களையும் பொலிசார் மடக்கிப் பிடித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பிலிமதலாவ பகுதியைச் சேர்ந்த 45-50 வயதுக்குட்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் நாட்டின் பல பாகங்களில் உள்ள விகாரைகளுக்குச் சென்று, புத்தர் சிலைகளைச் சேதப்படுத்தி கலசங்களைத் திருடி வந்துள்ளனர்.
விசாரணைகளின் போது, விகாரைகளில் திருடப்பட்ட கலசங்களை உருக்கி தங்கமாக மாற்றி, குருநாகல் மற்றும் பிலிமதலாவ பகுதிகளில் உள்ள தனியார் தங்க விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களிடமிருந்து ஒரு தொகுதி உருகிய தங்கம் மற்றும் திருட்டுச் சம்பவங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டி என்பன பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் நாவலப்பிட்டி பொலிசார், அவர்களை நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.














