தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம் சூரியனார்கோயில் ஆதீனத்தின், புதிய ஆதீனகர்த்தராக ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
14-ம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்ட இந்த ஆதீனத்துக்கு திருவாவடுதுறை ஆதீனம் தம்பிரான் திருக்கூட்டத்தில் இருந்து ஒருவர், குரு மகா சந்நிதானமாக நியமிக்கப்படுவது வழக்கம்
ஆதீன குரு மகா சந்நிதானமாக இருந்த மகாலிங்க சுவாமி, பெங்களூருவைச் சேர்ந்த பெண் பக்தரை திருமணம் செய்து கொண்டதையடுத்து, ஆதீனத்தின் சாவியை அறநிலையத் துறையிடம் ஒப்படைத்துவிட்டு, மடத்தில் இருந்து வெளியேறினார்.
பின்னர், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில் சூரியனார்கோயில் ஆதீன சாவியை, திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சார்ய சுவாமிகளிடம், அறநிலையத் துறையினர் கடந்த மாதம் 13-ம் திகதி ஒப்படைத்தனர்.
இதையடுத்து, சூரியனார்கோயில் ஆதீனம் ஒடுக்கம் மற்றும் ஆன்மார்த்த பூஜை அறைக்கு வைக்கப்பட்டிருந்த சீல் அகற்றப்பட்டு, பணிகள் நடைபெற்றன.
இந்நிலையில், திருவாவடுதுறை ஆதீனம் தம்பிரான் திருக்கூட்டத்தில் இருந்த ஸ்ரீமத் ராமலிங்க தம்புரான் சுவாமிகளை, சூரியனார் கோயில் ஆதீன கர்த்தராக திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் தேர்வு செய்தார்.
தொடர்ந்து, புதிய ஆதீனம் பொறுப்பேற்பு விழா நேற்று நடைபெற்றது. இதில், சூரியனார் கோயில் ஆதீனத்தின் 30-வது குரு மகா சந்நிதானமாக ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் பொறுப்பேற்றுக் கொண்டார்.
















