2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத்தில் நேற்றிரவு (16) நடந்த போட்டியில், பத்தும் நிஸ்ஸங்கவின் அபாரமான சதத்தினால், இலங்கை அணி சிறப்பான சகலதுறை ஆட்டத்தை வெளிப்படுத்தி அவுஸ்திரேலியாவை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
இந்த வெற்றியுடன் இலங்கை அணியானது சூப்பர் எட்டு சுற்றுக்குள் நுழைந்தது.
182 ஓட்டங்கள் என்ற சேஸிங்கில் பத்தும் நிஸ்ஸங்க (52 பந்துகளில் 100 ஓட்டம்) 10 பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்கள் கொண்ட ஒரு இன்னிங்ஸுடன் அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர்களை சிதறடித்தார்.
இரண்டாவது விக்கெட்டுக்கு குசல் மெண்டிஸுடன் (38 பந்துகளில் 51 ஓட்டம்) 97 ஓட்டங்கள் சேர்த்த அவர், போட்டியில் இலங்கை அணி இன்னும் இரண்டு ஓவர்கள் மீதமுள்ள நிலையில் வெற்றி இலக்கை அடைவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தார்.
இது டி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கைக்காக அதிகபட்ச தனிநபர் ஓட்ட எண்ணிக்கை ஆகும்.
மேலும், இது இலங்கைக்காக இரண்டாவது வேகமான டி20 சதமாகும்.
நேற்றிரவு 07.00 மணிக்கு கண்டி, பல்லேகலவில் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியானது முதலில் பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ளத் தீர்மானித்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, அணித் தலைவர் மிட்செல் மார்ஷ் (54 ஓட்டம்), டிராவிஸ் ஹெட்டின் (56 ஓட்டம்) முதல் விக்கெட்டுக்கான கூட்டணியுடன் விக்கெட் இழப்பின்றி 104 ஓட்டங்களை எடுத்தது.
பின்னர் 181 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்த வியத்தகு மாற்றத்திற்கு பெரும்பாலும் இலங்கை சுழற்பந்து வீச்சாளர்களின் முயற்சிகள் காரணமாக அமைந்தன.
இடது கைது சுழற்பந்து வீச்சாளர் துஷான் ஹேமந்த 37 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளையும், வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர இரண்டு விக்கெட்டுகளையும் அதிகபடியாக வீழ்த்தினர்.
அவுஸ்திரேலியாவின் இறுதி நான்கு விக்கெட்டுகளும் வெறும் ஆறு ஓட்டங்களுக்குள் விழுந்தமை விசேட அம்சமாகும்.
பின்னர் 182 என்ற ஓட்ட இலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின் முதல் விக்கெட் எட்டு ஓட்டங்களுக்கு வீழ்ந்தது.
குசல் ஜனித் பெரேரா ஒரு ஓட்டத்துடன் வெளியேறினார்.
எனினும் பத்தும் நிஸ்ஸங்க மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் சிறப்பான இணைப்பாட்டத்தை வழங்கி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
இவர்களை தவிர பவன் ரத்னாயக்க 15 பந்துகளில் 28 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.
போட்டியின் ஆட்டநாயகனாக பத்தும் நிஸ்ஸங்க தெரிவானார்.
இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை நடந்த இரண்டாவது போட்டியில் சிம்பாப்வே அணியிடம் அதிர்ச்சியடைந்த அவுஸ்திரேலியா, தகுதிச் சுற்று விதியை தங்கள் கைகளில் வைத்திருக்க ஒரு வெற்றி தேவைப்பட்டது.
எனினும், இந்த தோல்வியுடன் 2026 டி20 உலகக் கிண்ணத்தின் சூப்பர் எட்டு சுற்றுக்கு முன்னேறும் அவுஸ்திரேலியாவின் நம்பிக்கை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது.
அவுஸ்திரேலியா தனது குழுவிலிருந்து இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் அணியாக முன்னேற வேண்டுமென்றால், சிம்பாப்வே அணி அயர்லாந்து மற்றும் இலங்கைக்கு எதிரான மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைய வேண்டும்.
பின்னர் ஓமானை அவுஸ்திரேலியா தோற்கடிக்க வேண்டும்.
இது நிகர ஓட்ட விகிதத்தை செயல்படுத்தும்.
இதேவேளை கொல்கத்தாவில் நடந்த மற்றொரு டி:20 உலகக் கிண்ணப் போட்டியில் இத்தாலியை எதிர்த்து இங்கிலாந்து கடுமையாகப் போராடி 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 8 இடத்தைப் பிடித்தது.
டெல்லியில் நடந்த மற்றொரு போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸை எதிர்த்து ஆப்கானிஸ்தான் அணி பதட்டமான வெற்றியைப் பெற்று அடுத்த சுற்றுக்கான தங்கள் வாய்ப்புகளைத் தக்க வைத்துக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
புள்ளிப் பட்டியல்:


















