பார்வையாளர்களின் அமோக வரவேற்ப்பினை பெற்றதைத் தொடர்ந்து புது டெல்லியில் நடைபெறும் 2026 ஆம் ஆண்டுக்கான செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு எதிர்வரும் பெப்ரவரி 21 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசாங்கம் இன்று (18) தெரிவித்துள்ளது.
மேலும், பார்வையாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு மிகவும் வசதியான அனுபவத்தை உறுதி செய்வதற்காக, கண்காட்சி நேரங்கள் மாலை 6 மணியிலிருந்து இரவு 8 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.
அதேநேரம், பெப்ரவரி 19 (வியாழக்கிழமை) அன்று நடைபெறும் வரையறுக்கப்பட்ட நிகழ்வுகள் காரணமாக, உச்சிமாநாடு அன்று பொதுமக்களுக்கு மூடப்படும்.
எனினும், கண்காட்சி பெப்ரவரி 20 மற்றும் 21 ஆகிய திகதிகளில் பொதுமக்களின் பார்வைக்காக மீண்டும் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவை (AI) மனிதகுலத்தின் நன்மைக்காகப் பொறுப்புணர்வுடன் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
இதுவரை மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் புது டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறும் இந்த கண்காட்சியை பார்வையிடுவதற்காக பதிவு செய்துள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.
இந்த உச்சிமாநாடு முன்னதாக பெப்ரவரி 20 அன்றுடன் முடிவடைய திட்டமிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

















