கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா நேற்று நிறைவடைந்தது. இங்கு நேற்று முன்தினம் மாலை கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. நெடுந்தீவு பங்குத் தந்தை பத்திநாதன்கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து, சிலுவைப் பாதை, திருப்பலி, தேர் பவனி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
முக்கிய நிகழ்வாக நேற்று காலை கூட்டு திருப்பலி நடைபெற்றது. யாழ் மறை மாவட்ட குரு முதல்வர் ஜோசப்தாஸ் ஜெபரத்தினம், நெடுந்தீவு பங்குத்தந்தை பத்திநாதன், ராமேசுவரம் வேர்கோடு பங்குத் தந்தை தாமஸ் பரிபாலன் ஆகியோர் தமிழ் மற்றும் சிங்கள மொழியில் திருப்பலி நடத்தினர்.
இதில், இலங்கை கடற்படையின் வைஸ் அட்மிரல் மனகோடா,வடக்கு கட்டளை தளபதி கேப்டன் லியங்கமேகி, இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரி சாய் முரளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், இந்தியாவிலிருந்து சென்ற 3,741 பேர், இலங்கையிலிருந்து சென்ற 9 ஆயிரம் பேர் என 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நேற்று காலை பக்தர்களுக்கு இலங்கை கடற்படை சார்பில் உணவு வழங்கப்பட்டது. பின்னர், இந்தியாவிலிருந்து சென்ற பக்தர்கள் நேற்று மாலை ராமேஸ்வரம் திரும்பினர்.













