பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக மக்கள் இன்றையதினம் அமைதி வழியிலான கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த வைத்தியசாலையில் ஏராளமான கட்டடங்கள் காணப்படுவதாகவும், ஆனால் வைத்தியர்கள் இருவரே கடமை செய்வதாகவும், ஒரு தாதியர் கூட வைத்தியசாலைக்கு நியமிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் கடந்த காலங்களில் குறித்து வைத்தியசாலையில் 24 மணி நேர சேவை இடம்பெற்றதாகவும், நோயாளர் விடுதி இயங்கியதாகவும், தற்போது அது நிறுத்தப்பட்டதாகவும், குறித்த வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டி காரைநகர் வைத்தியசாலைக்கு தற்காலிகமாக வழங்கப்பட்டதாவும் தெரிவிக்கப்படுகிறது.
எனவே மேற்குறித்த பிரச்சினைகளுக்கு உடனடியாக தேர்வினை வழங்குமாறு கோரியே இந்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “வைத்தியசாலையை தரமுயர்த்துங்கள், விடுதி இயங்கும் வைத்தியசாலையாக இந்த வைத்தியசாலை தொழிற்பட வேண்டும், மக்களின் ஆரோக்கியம் எங்கள் உரிமை, சுகாதார சேவைகள் அரசின் கடமை, நோயாளிகளின் உயிர் முக்கியம், வட்டுக்கோட்டை வைத்தியசாலையை புறக்கணிக்க கூடாது, மருத்துவ சேவையில் குறைபாடு வேண்டாம், வைத்தியசாலையில் இடைநிறுத்தப்பட்ட கட்டட வேலைகளுக்கு நிதியை வழங்கு” உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரி சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போராட்டத்தில், பொதுமக்கள், வைத்தியசாலையின் பயனாளிகள், சமூக மட்ட அமைப்பினர் என பலரும் கலந்துகொண்டனர்.













