மெட்ரோ போஸ்டர் வழக்கில் அண்மையில் முறியடிக்கப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா ((LeT) குழுவின் ஒருங்கிணைப்பாளரும், அந்த அமைப்பின் பயங்கரவாதியுமான ஷபீர் அகமட் லோன் (Shabbir Ahmad Lone), டெல்லி பொலிஸாரின் சிறப்புப் பிரிவு குழுவினரால் இன்று (30) கைது செய்யப்பட்டார்.
இவர், குறித்த பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய, இரகசியமாகச் செயல்படும் ஒரு உறுப்பினர் என அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
கொல்கத்தா மற்றும் தமிழ்நாடு முழுவதும் ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கைகளில், ஏழு பங்களாதேஷ் நாட்டினரும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரு இந்தியர் உட்பட எட்டு பேர் அண்மையில் கைது செய்யப்பட்டதன் பின்னணியில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத வழக்கில் பத்தாண்டு காலம் சிறைத்தண்டனை அனுபவித்து, 2019 ஆம் ஆண்டில் பிணையில் விடுவிக்கப்பட்டு, பின்னர் பங்களாதேஷுக்கு தப்பிச் சென்ற ஷபீர் அகமட் லோனுடன் இந்த அமைப்பு செயல்பட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
2008 நபவம்பர் 26 மும்பை தாக்குதலின் மூளையாகச் செயல்பட்ட, தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் உயர்மட்டத் தளபதிகளான ஹபீஸ் சயீத் மற்றும் ஜகி-உர்-ரஹ்மான் லக்வி ஆகியோருடன் ஷபீர் அகமட் லோன் நேரடித் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை, கைது செய்யப்பட்ட எட்டு நபர்களிடமும், அவர்கள் மதஸ்தலங்கள் அல்லது அதிக மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தார்களா என்பது குறித்து டெல்லி பொலிஸார் தற்போது முழுமையான விசாரணை நடத்தி வருகின்றனர்.














