டேவ் புயலின் மிக மோசமான பாதிப்பு இங்கிலாந்தைக் கடந்து சென்ற நிலையில் ஐக்கிய இராஜ்ஜியத்தின் பல பகுதிகளுக்கான வானிலை எச்சரிக்கைகள் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளன.
அதன்படி, வடக்கு இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸின் சில பகுதிகளை உள்ளடக்கியிருந்த செம்மஞ்சள் நிற புயல் எச்சரிக்கை உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 3 மணிக்கு நீக்கப்பட்டது.
அது போல், வடக்கு அயர்லாந்து முழுவதையும் உள்ளடக்கிய பலத்த காற்றுக்கான மஞ்சள் நிற வானிலை ஆய்வு நிலையத்தின் எச்சரிக்கையும், ஸ்காட்டிஷ் ஹைலேண்ட்ஸில் பனிப்பொழிவுக்கான மற்றொரு எச்சரிக்கையும் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளன.
எவ்வாறெனினும், ஈஸ்டர் ஞாயிறு கொண்டாட்டம் இன்று தொடங்கும் நிலையில், இரண்டு மஞ்சள் நிற எச்சரிக்கைகள் இன்னும் நடைமுறையில் உள்ளன.
வடக்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸை உள்ளடக்கிய இந்த எச்சரிக்கை இன்று காலை 7 மணிக்கு முடிவடைகிறது.
ஸ்கொட்லாந்தின் பிரதான நிலப்பரப்பு முழுவதையும், அத்துடன் ஆர்க்னி மற்றும் ஷெட்லாந்து தீவுகளையும் உள்ளடக்கிய மற்றொரு எச்சரிக்கை நண்பகல் வரை அமுலில் இருக்கும்.
அதனால், டேவ் புயல் வட கடலுக்குள் செல்வதற்கு முன்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள குறித்த பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கன மழை மழைக்கான வாய்ப்பும் காணப்படுகின்றது.
எனவே, பொது மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
டேவ் புயலின் தாக்கம் காரணமாக ஐக்கிய இராஜ்ஜியத்தின் பல பகுதிகளில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன், பாதுகாப்புக் காரணங்களுக்காக பல சாலைகளும் பல விமான சேவைகளும் இரத்து செய்யப்பட்டும் உள்ளன.












