பெருமளவியலான சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கடத்த முயன்ற குற்றத்துக்காக கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு சீன நாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
23 மற்றும் 24 வயதுடைய சந்தேக நபர்கள், சீனாவின் குன்மிங்கிலிருந்து இன்று (05) அதிகாலை சுமார் 1:10 மணியளவில் இலங்கைக்கு வந்தடைந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுங்க அதிகாரிகள் அவர்களிடம் முன்னெடுத்த சோதனையில், அவர்களில் பயணப் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, சீனாவில் தயாரிக்கப்பட்ட மொத்தம் 24,200 சிகரெட்டுகள் அடங்கிய 121 அட்டைப் பெட்டிகளைக் கண்டுபிடித்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகளின் பெறுமதி சுமார் 3.63 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
அந்த இரு நபர்களும் தற்போது விமான நிலைய சுங்க அதிகாரிகளின் காவலில் உள்ளனர்.
இது குறித்த மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.












