உலகளாவிய எண்ணெய் விலைகள் இன்றைய (08) தினம் கடுமையாகச் சரிந்துடன், பங்குச் சந்தைகள் உயர்வடைந்தன.
முக்கியமான ஹார்முஸ் நீரிணை நீர்வழியை மீண்டும் திறப்பதை உள்ளடக்கிய, நிபந்தனைக்குட்பட்ட இரண்டு வார கால போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்காவும் ஈரானும் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி, புதன்கிழமை காலை ஆரம்ப வர்த்தகத்தில் பிரென்ட் மசகு எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு சுமார் 13% சரிந்து 94.80 அமெரிக்க டொலர்களாக (£70.73) ஆகக் குறைந்தது.
அமெரிக்க மேற்கு டெக்சாஸ் இன்டர்மீடியட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 15 சதவீதம் சரிந்து 95.75 அமெரிக்க டொலர்களாக வர்த்தகமானது.
எனினும், பெப்ரவரி 28 அன்று மோதல் தொடங்குவதற்கு முன்பு இருந்ததை விட எண்ணெய் விலைகள் அதிகமாகவே உள்ளன.
அப்போது, ஒரு பீப்பாய் சுமார் 70 டொலர் என்ற அளவில் வர்த்தகமாகி வந்தது.
அதேநேரம், போர் நிறுத்த அறிவிப்புடன் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் முக்கிய பங்கு குறியீடுகள் புதன்கிழமை காலை உயர்ந்தன.
ஜப்பானின் நிக்கெய் 225 குறியீடு 5% உயர்ந்தது, அதே நேரத்தில் தென் கொரியாவின் கோஸ்பி கிட்டத்தட்ட 6% அதிகரித்தது.
ஹாங்கொங்கின் ஹேங் செங் 2.8% உயர்ந்தது, அதே சமயம் அவுஸ்திரேலியாவின் ASX 200 குறியீடு 2.7% உயர்ந்தது.
அமெரிக்க பங்குச் சந்தை எதிர்கால ஒப்பந்தங்களும் வால் ஸ்ட்ரீட் உயர்வான தொடக்கத்தைக் குறிக்கின்றன.













