சுகாதார அமைச்சின் ஓய்வுபெற்ற தலைமை சட்ட அதிகாரியான அஹ்மட் ரியாஸ் அஹ்மட், ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டு, 2026 மே 5 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு ஒரு முறைப்பாட்டினை விசாரித்த பின்னர், நேற்று பிற்பகல் 3.45 மணியளவில் சந்தேக நபரை கைது செய்ததாக உறுதிபடுத்தியது.
சட்ட அதிகாரியாகப் இவர் பணியாற்றியபோது, சுகாதார அமைச்சகத்திற்குக் குத்தகைக்கு விடப்பட்ட மெடி ஹவுஸ் கட்டிடத்தின் வாடகைக் காலத்தை நீட்டிப்பதற்காக அகமட் மூன்று குத்தகை ஒப்பந்தங்களைத் தயாரித்துள்ளார்.
அவர் ஒப்பந்த தயாரிப்புக் கட்டணமாக ரூ. 4,134,887 கோரியதாகவும், அதில் ரூ. 2,000,000 பெற்றுக்கொண்டு, மீதித் தொகையைக் கேட்டதாகவும் கூறப்படுகிறது.
மீதமுள்ள தொகையிலிருந்து, மக்கள் வங்கியில் உள்ள ஒரு கணக்கிலிருந்து ‘மெடி ஹவுஸ் பிரைவேட் கம்பெனி’ என்ற பெயரில் வழங்கப்பட்ட ரூ. 500,000 மதிப்புள்ள காசோலையைப் பணமாக்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.













