இந்தியத் துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன்,கொழும்புக்கு வந்திருந்தபோது, தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை கொண்ட கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்தார்.இந்தச் சந்திப்பின் முடிவில் அவர் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சிவஞானம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் ஆகிய இருவருடைய கைகளையும் பிடித்தபடி ஒரு விடயத்தை சொன்னவர் என்று சிவஞானம் பின்னர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
“உங்கள் மத்தியில் கட்சிகள் அதிகரித்து விட்டன.இதனை ஓர் ஒழுங்குக்குள் கொண்டு வாருங்கள்” என்று இந்தியத் துணை ஜனாதிபதி தம்மிடம் கூறியதாக சிவஞானம் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இந்தியத் துணை ஜனாதிபதி கூறியதை அப்படியே வெளிப்படையாக சிவஞானம் விளங்கியிருப்பார் போல் தெரிகிறது. ஏனென்றால் ஊடகங்களுக்கு அவர் அது தொடர்பாகப் பேசியபோது அதை உணரக்கூடியதாக இருந்தது.
ஆனால்,ஒரு துணை ஜனாதிபதி அவ்வாறு கூறுகிறார் என்றால், அதுவும் இரண்டு பேருடைய கைகளையும் பிடித்துக் கொண்டு அதை கூறுகிறார் என்றால், அதை அப்படியே வெளிப்படையாக விளங்கிக் கொள்ள வேண்டுமா? அல்லது அதற்குள் வேறு அர்த்தங்கள் உட்பொதிந்து இருக்கக்கூடுமா? அதாவது இந்தியத் துணை ஜனாதிபதி ராஜதந்திர பரிபாஷையில் சிவஞானத்துக்கும் சிறீதரனுக்கும் வேறு எதனையோ உணர்த்த முற்பட்டாரா?
ஈழத் தமிழர்கள் மத்தியில் அதிகம் கட்சிகள் உண்டுதான். ஆனாலும் அது தமிழ்நாட்டில் உள்ளவற்றை விடவும், தென்னிலங்கையில் உள்ளவற்றை விடவும் அதிகமானது அல்ல. மேலும் எத்தனை நூறு கட்சிகள் இருந்தாலும் நடைமுறையில் மூன்று கட்சிகள்தான் முன்னிலையில் நிற்கின்றன. தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசியப் பேரவை,ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவை மூன்றும்தான். தேர்தலில் இவை மூன்றும்தான் ஒப்பீட்டளவில் அதிக ஆசனங்களைப் பெறுகின்றன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குகள் சிதறியது உண்மை. ஆனாலும் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட மேற்சொன்ன மூன்று கட்சிகளுக்கும் கிடைத்த மொத்த வாக்குகளின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் அதிகம்.
எனவே இந்தியத் துணை ஜனாதிபதி கட்சிகள் அதிகம் என்று கூறியது வேறு எதையோ குறிக்கிறது என்று உணரக்கூடியதாக உள்ளது. உள்ளதில் பெரிய கட்சியாகிய உங்களுடைய கட்சிக்குள்ளேயே இரண்டு பிரிவுகள் என்பதனை அவர் ராஜதந்திர பரிபாசையில் கூறினாரா? அதை சிவஞானம் அப்படியே வார்த்தைக்கு வார்த்தை விளங்கிக் கொண்டு விட்டாரா?
தமிழ்த் தேசிய அரசியலில் உள்ளவற்றுள் பெரிய கட்சி தமிழரசுக் கட்சி. அது ஏனைய கட்சிகளுக்கு முன்மாதிரியாக தன்னை ஓர் உருகிப் பிணைந்த கட்டமைப்பாகப் பேண முடியவில்லை என்பது எந்த ஒரு சின்னப் பிள்ளைக்கும் தெரியும். ராதாகிருஷ்ணன் தமிழரசுக் கட்சியின் இரண்டு முக்கியஸ்தர்களின் கைகளைப் பிடித்துக்கொண்டு அதைக் கூறியிருக்கிறார். எனவே அங்கு அவர் கூறவந்த விடயம் நேரடியாக தமிழரசுக் கட்சிக்குரியது என்று எடுத்துக் கொள்ளலாமா?
சிவஞானம் பதில் தலைவராக இருப்பதே அந்த முரண்பாட்டின் விளைவுதான். சுமந்திரன் பதில் செயலாளராக இருப்பதும் அதனால்தான். ஆனால் அப்படி எந்த முரண்பாடும் தங்களுக்குள் இல்லை என்று சிவஞானம் இடைக்கிடை கூறிக் கொள்வதுண்டு.
எனினும் உண்மை நிலவரம் அதுவல்ல என்பதனை சமூக வலைத்தள சூழல் நமக்கு உணர்த்துகின்றது. இந்த விடயத்தில் ஆகப்பிந்திய ஓர் உதாரணத்தை இங்கு காட்டலாம்.அண்மையில் தையிட்டி விவகாரம் தொடர்பாக காணி உரிமையாளர்களும் அரசியல் செயற்பாட்டாளர்களும் தந்தை செல்வா கலையரங்கில் சந்தித்தார்கள். இந்தச் சந்திப்பின் பின்னணியில் சிறீதரன் ஊடகங்களுக்குத் தெரிவித்த கருத்து ஒன்றை இங்கு சுட்டிக்காட்டலாம். கிளிநொச்சியைத் தளமாகக்கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாருக்கு எதிரான கருத்துக்கள் அவை. சந்திரகுமாரும் தானும் ஒரே கூட்டுக்குள் இருக்கமுடியாது என்று பொருள் கொள்ளத்தக்க விதத்தில் சிறீதரன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்துள்ளார்.ஆனால் சந்திரகுமாரும் சுமந்திரனும் நெருக்கமாக இருக்கிறார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. கிளிநொச்சியில் சிறிதரனுக்கு எதிராக சுமந்திரன் சந்திரகுமாரை நெருங்கிச் செல்கிறார் என்பதுதான் வெளிப்படையாகத் தெரியும் உண்மை. அந்த முரண்பாட்டைத்தான் சிறீதரன் ஊடகங்கள் முன் வெளிப்படுத்தினார்.
இது தமிழ்த் தரப்பில் உள்ள பெரிய கட்சியின் நிலை. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழரசுக் கட்சிக்குக் கிடைத்த அதேயளவு ஆசனங்கள்தான் தமிழ்ப் பகுதிகளில் அரசாங்கத்துக்கும் கிடைத்தன. எனவே “தமிழ்த் தரப்பு எனப்படுவது இப்பொழுது தமிழரசுக் கட்சி மட்டுமல்ல, நானும்தான்” என்று அரசாங்கம் கூறக் கூடியதாக இருக்கிறது.
இந்த நிலைமைகளைக் கவனத்தில் கொண்டே இந்தியத் துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் அவ்வாறு கூறியிருக்கலாம்.
மேலும் தன்னுடைய பிரதான கோரிக்கைகளில் தமிழ்த் தரப்பு ஒன்றாக இல்லை.ஒரு பகுதி மாகாண சபைத் தேர்தலைக் கேட்கிறது. இன்னொரு பகுதி புதிய யாப்பை நோக்கி முன்மொழிவைத் தயாரிக்க வேண்டும் என்று சொல்கிறது. புதிய யாப்பை நோக்கித் தமிழ்த் தரப்பானது பொதுவான முன்மொழிவை வைக்க வேண்டும் என்ற விடயத்தில் கட்சிகள் தாங்களாக இணைய முடியாதவைகளாகக் காணப்படுகின்றன.அதனால் வெளியில் இருந்து சிவில் சமூகங்கள் அதில் தலையிட வேண்டி ஏற்பட்டது.தமிழ் சட்டத்தரணிகள் சங்கம்,தமிழ் ஆயர்கள் சங்கம்,யாழ்ப்பாண ஊடக அமையம் போன்றன இந்த விடயத்தில் ஏன் தலையிட வேண்டி வந்தது? கட்சிகள் தாங்களாக ஒன்றிணைய முடியவில்லை என்பதனால்தானே ?
அது மட்டுமல்ல ஒரு புதிய யாப்பை நோக்கிப் பொதுவான முன்மொழிவைத் தயாரிக்கும் விடயத்திலும்கூட தமிழ்த் தரப்பில் இப்பொழுது நான்கு வெவ்வேறு முன்னெடுப்புகள் உண்டு. முதலாவது “ஐக்கிய ராஜ்ய”வை அடுத்தடுத்த கட்டத்திற்கு வளர்த்துச்செல்வது.இரண்டாவது 13ஆவது திருத்தத்திலிருந்து தொடங்கி அடுத்தடுத்த கட்டத்துக்கு போவது. மூன்றாவது சமஸ்டி. நான்காவது தமிழ் மக்கள் மத்தியில் ஒரு வெகுசன வாக்கெடுப்பை வைப்பது.அதாவது அரசறிவியல் வார்த்தைகளில் சொன்னால்,”ஒப்பம் கோடலுக்கான”-Plebiscite- ஒரு தேர்தலை நடத்துவது.
இந்த நான்கு தரப்புகளும் ஒன்று மற்றதைக் குற்றம் சாட்டுகின்றன. கட்சிகளை ஒருங்கிணைக்கும் வேலைகளிலும் ஒன்றுக்கு மேற்பட்ட ஏற்பாடுகள்.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை அடித்தளமாகக் கொண்ட தமிழ்த் தேசியப் பேரவையானது,யாப்பு நிர்ணய பொதுச் சபை ஒன்றை அறிவித்திருக்கிறது. இது சில மாதங்களுக்கு முன்பு இளம் கலைஞர் மண்டபத்தில் நடந்த சிவில் அமைப்புகளுடான சந்திப்பில் தீர்மானிக்கப்பட்ட ஒரு கட்டமைப்பு ஆகும்.
இந்த அறிவிப்பு சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னெடுப்புக்களுக்கு எதிரானது என்று தமிழரசுக் கட்சியும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கருதுவதாகத் தெரிகிறது.ஆனால் சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னெடுப்புக்கு முன்னரே முன்னணி இதைத் தொடங்கி விட்டது.
சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னெடுப்புகளில் முன்னணிக்கு சில அதிருப்திகள் இருப்பதாகவும் அறியமுடிகிறது. சட்டத்தரணிகள் சங்கம் முன்னர் முன்னணிக்கு நெருக்கமானது என்று பார்க்கப்பட்டது.ஆனால் அந்தச் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டாவது சந்திப்பில் தமிழ்த் தேசியப் பேரவையாக முன்னணி கலந்து கொள்வதில் நெருக்கடிகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.தமிழ்த் தேசியப் பேரவையில் உள்ள கட்சிகள் அதில் மெய்நிகர் ஏற்பாட்டுக்கூடாகக் கலந்துகொள்வதற்கு சட்டத்தரணிகள் அமைப்பு அனுமதிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.
அதனால்தான் முன்னணியானது அரசியலமைப்பு நிர்ணய பொதுச் சபை என்ற அறிவிப்பை வெளியே விட்டது என்று ஏனைய கட்சிகள் சந்தேகிக்கின்றன. சட்டத்தரணிகள் சங்கம் ஒரு புதிய யாப்புக்கான பொதுவான தமிழ் முன்மொழிவைத் தயாரிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கும் பொழுது தமிழ்த் தேசியப் பேரவையும் இவ்வாறு அரசியலமைப்பு நிர்ணய சபை என்று அறிவிப்பை வெளியிட்டிருக்கத் தேவையில்லை என்று ஏனைய கட்சிகள் கருதுவதாகவும் தெரிகிறது.
ஆனால் சட்டத்தரணிகள் அமைப்பின் முன்னெடுப்புக்கு முன்னரே முன்னணி இதுதொடர்பான சந்திப்பை சிவில் சமூகங்களோடு மேற்கொண்டுவிட்டது. இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்ற அந்தச் சந்திப்பின் விளைவாக உருவாக்கப்பட்டதுதான் மேற்படி அரசியலமைப்பு நிர்ணய பொதுச் சபை ஆகும். ஆனால் அது வேகமாக இயங்கவில்லை.அதைவிட வேகமாக சட்டத்தரணிகள் அமைப்பு செயல்படுவதாகத் தெரிகிறது.அதனால்தான் எது முதலில் தோன்றியது என்ற குழப்பம் ஏற்படுகிறது.
எதுவானாலும் ஒரு புதிய யாப்பை நோக்கிக் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் ஒன்றிணைந்த போக்கு இல்லை என்று தெரிகிறது.மேலும் ஒரு பொதுவான முன்மொழிவை முன்வைப்பதிலும் வேறுபட்ட பார்வைகள் இருப்பதாகத் தெரிகிறது.
இவ்வாறு பிரதானமான ஒரு விடயத்திலேயே தமிழ்க் கட்சிகள் தங்களுக்கு இடையே ஐக்கியப்பட முடியாதவைகளாகக் காணப்படும் ஒரு சூழலை முன் வைத்துத் தான் அவ்வாறு கூறியிருக்கலாம்.
உள்ளதில் பெரிய கட்சி தானே தன்னளவில் ஓர் உருகிப் பிணைந்த அமைப்பாக இயங்க முடியாத ஒரு சூழலில்,ஒரு பெரிய கட்சியாக, தீர்மானிக்கும் கட்சியாக, ஏனைய கட்சிகளையும் அரவணைத்துக் கொண்டு போகத் தயாரற்ற ஒரு சூழலில்,அரசாங்கம் தானும் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக உலக அரங்கில் கூறிக்கொண்டிருக்கும் ஒரு பின்னணியில், தமிழ்த் தரப்பானது ஒரு தேசமாக,ஒரே பலமான திரட்சியாக இல்லை என்றால் அதனை வெளித்தரப்புகள் எப்படி அணுகுவது?













