வடக்கு அயர்லாந்து மோதல் கால மரபுவழிச் சட்டம் (Legacy Act) தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில், பிரித்தானிய உச்ச நீதிமன்றம் அரசுக்கு ஆதரவான தீர்ப்பை வழங்கியுள்ளது.
இது பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
கடந்த 2023-ஆம் ஆண்டு அப்போதைய பழமைவாதக் கட்சி (Conservative) அரசால் இந்தச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன்படி, மோதல் காலக் குற்றங்களில் ஈடுபட்டவர்கள், ‘நல்லிணக்கம் மற்றும் தகவல் மீட்புக்கான சுதந்திரமான ஆணைக்குழுவிடம்’ (ICRIR) ஒத்துழைப்பு வழங்கினால், அவர்களுக்கு நிபந்தனையுடனான மன்னிப்பு (Immunity) வழங்க வழிவகை செய்யப்பட்டது.
தற்போது பதவியிலுள்ள தொழிலாளர் கட்சி (Labour) அரசு, இந்த நிபந்தனை மன்னிப்பு வழங்கும் பிரிவை ரத்து செய்வதற்கான மசோதாவை ஏற்கனவே நாடாளுமன்றத்தில் கொண்டு வந்துள்ளது.
முன்னதாக, வடக்கு அயர்லாந்து உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆகியவை, இந்தச் சட்டம் மனித உரிமைகளுக்கு எதிரானது என்றும் ‘வின்ட்சர் கட்டமைப்பு’ (Windsor Framework) உடன்படிக்கையை மீறுவதாகவும் தீர்ப்பளித்திருந்தன.
எனினும், இதனை நிராகரித்துள்ள உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு அரசுக்கு ஆதரவான தீர்ப்பை வழங்கியுள்ளது.
சட்டத்தை மாற்றத் திட்டமிட்டிருந்த போதிலும், ‘வின்ட்சர் கட்டமைப்பு’ தொடர்பான சட்டச் சிக்கல்களைத் தெளிவுபடுத்தவே அரசு இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றது.
இந்தத் தீர்ப்பை வடக்கு அயர்லாந்து அலுவலகம் (NIO) வரவேற்றுள்ளது.
இந்தத் தீர்ப்பு தங்களுக்குக் கிடைத்துள்ள “கடுமையான அடி” எனப் பாதிக்கப்பட்டோர் சார்பில் போராடும் அமைப்புகள் வர்ணித்துள்ளன.
மரபுவழிச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுவரப் போவதாகத் தற்போதைய அரசு உறுதியளித்துள்ள போதிலும், இந்தத் தீர்ப்பு சட்ட ரீதியான புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளது.













