கிழக்கு பெல்ஃபாஸ்ட் (Belfast) பகுதியில் நபர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இரண்டு பேருக்கு எதிராகக் கொலைக் குற்றம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
கடந்த மே 12 ஆம் திகதி, ஹோலிவுட் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்த குழு ஒன்று, அங்கிருந்த 51 வயதுடைய நிக்கோலஸ் கார்டன் (Nicholas Gordon ) என்பவரை கொடூரமாகத் தாக்கியுள்ளது.
இத்தாக்குதலில் படுகாயமடைந்த நிக்கோலஸ் கார்டன் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும், தீவிர சிகிச்சை பலனின்றி அவர் கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து பொலிஸார் இந்த விவகாரத்தைக் கொலை வழக்காகப் பதிவு செய்து விசாரணையை முடுக்கிவிட்டனர்.
இந்த நிலையில் இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட 25 மற்றும் 31 வயதுடைய இரண்டு நபர்கள் மீது கொலைக் குற்ற வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டுள்ள இவ்விருவரும் இன்று பெல்ஃபாஸ்ட் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கொடுங்காயங்களை ஏற்படுத்தும் நோக்குடன் தங்குமிடத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறி, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த மேலும் இருவர் கடந்த செவ்வாய்க்கிழமை பொலிஸாரால் எவ்வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












