தொழிலாளர் கட்சி ஆட்சிக்கு வந்ததிலிருந்து உயர்ந்த வரிகள் மற்றும் ஊதியங்களால் பிரிட்டனின் மிகப்பெரிய சில்லறை விற்பனையாளர்கள் கடந்த ஆண்டில் சுமார் 18,000 வேலைவாய்ப்புகளை குறைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பிரிட்டனின் மிகப்பெரிய மளிகைப்பொருள் நிறுவனமான டெஸ்கோ (Tesco), தனது அண்மைய நிதியாண்டில் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் சுமார் 5,000 பணியாளர்களை குறைத்தமையே இந்த வேலை இழப்புகளுக்கு முக்கிய காரணமாக அமைந்தது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனிடையே, பல்பொருள் அங்காடித் தொடர் நிறுவனமான ஜே செயின்ஸ்பரி (J Sainsbury), பல்பொருள் விற்பனையகக் குழுமமான ஜோன் லூயிஸ் பார்ட்னர்ஷிப் (John Lewis Partnership) மற்றும் கிங்ஃபிஷர் (Kingfisher) ஆகிய அனைத்திலும் கடந்த ஆண்டில் சராசரி ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் 3,000 குறைந்துள்ளதாக அண்மைய மாதங்களில் வெளியிடப்பட்ட ஆண்டு அறிக்கைகளை ப்ளூம்பெர்க் நியூஸ் பகுப்பாய்வு செய்ததில் தெரியவந்துள்ளது.
நிதி அமைச்சர் ரேச்சல் ரீவ்ஸின் வரி உயர்வுகள் நாட்டின் மிகப்பெரிய தொழில் வழங்கும் நிறுவனங்களை பாதித்து வருதாக தொழில்துறைத் தலைவர்களின் எச்சரிக்கைகளை அடிக்கோடிட்டு காட்டும் விதமாக இந்த இழப்புகளின் அளவு அமைந்துள்ளது.














