டெவோனில் ( Devon) உள்ள ஒரு வயல் பகுதியில் கடந்த புதன்கிழமை ஹெலிகொப்டர் விழுந்து நொறுங்கியதில் உயிரிழந்த அரச கடற்படையைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்களின் பெயர்களை பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது.
அந்த தகவலின்படி, பிரிட்டனின் பெண் கமாண்டோவான 31 வயது லெப்டினன்ட் லில்லி-மே ஃபிஷர் (Lieutenant Lily), 42 வயது லெப்டினன்ட் கமாண்டர் கிறிஸ் கெய்சன் (Chris Gayson ) மற்றும் 24 வயதான கடற்படை இளநிலை அதிகாரியான ஓவன் கிரீன் (Owen Green) ஆகியோர் விபத்தில் உயிரிழந்தவர்கள் ஆவர்.
புதன்கிழமை அதிகாலை 4 மணியளவில், ஓக்ஹாம்ப்டனுக்கு அருகிலுள்ள சோர்டன் டவுன் என்ற இடத்தில் ஒரு வயல்வெளியில் MK4 ஹெலிகொப்டர் விழுந்து நொறுங்கியதை அடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன.
பலத்த காற்று, கனமழை மற்றும் குறைந்த பார்வைத் திறன் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
எவ்வாறெனினும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்த மூவருக்கும் பிரிட்டன் ஆயுதப் படையினர் அஞ்சலி செலுத்தும் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.














