பிரித்தானிய அரசியலில் முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படும் மாற்றத்தின் ஒரு பகுதியாக, தொழிலாளர் (Labour) கட்சியின் புதிய தலைவராக ஆன்டி பர்ன்ஹாம் (Andy Burnham) அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் எதிர்வரும் திங்கட்கிழமை பிரித்தானியாவின் புதிய பிரதமராக பதவியேற்க உள்ளார்.
கட்சித் தலைவர் பதவிக்கான போட்டியில் அவரை எதிர்த்து வேறு எந்த வேட்பாளரும் களமிறங்காததால், ஆன்டி பர்ன்ஹாமின் வெற்றி முன்கூட்டியே உறுதியாகக் கருதப்பட்டது. மேலும், தொழிலாளர் கட்சியின் 300-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். இதன் மூலம் கட்சிக்குள் அவருக்கு வலுவான ஒற்றுமையான ஆதரவு இருப்பது உறுதியாகியுள்ளது.
மேக்கர்ஃபீல்ட் (Makerfield) தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஆன்டி பர்ன்ஹாம், தொழிலாளர் கட்சியின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கட்சியின் எதிர்காலக் கொள்கைகள், பொருளாதார வளர்ச்சி, சுகாதாரம், கல்வி மற்றும் பொதுச் சேவைகள் உள்ளிட்ட துறைகளில் புதிய மாற்றங்களை முன்னெடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
இதற்கிடையில், தற்போதைய பிரதமரான சர் கியர் ஸ்டார்மர் (Sir Keir Starmer), கடந்த மாதம் நிகழ்த்திய உரையில் தனது பதவியை விலகுவதாகவும், கட்சித் தலைமைப் போட்டியில் மீண்டும் போட்டியிடப் போவதில்லை என்றும் அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தலைமையின் பொறுப்பு ஆன்டி பர்ன்ஹாமிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
புதிய தலைவராக அறிவிக்கப்பட்ட பின்னர் ஆன்டி பர்ன்ஹாம் (Andy Burnham) நிகழ்த்திய உரையில், நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது, மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைப்பது மற்றும் அனைத்து தரப்பினருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்குவது தனது அரசாங்கத்தின் முக்கிய இலக்குகளாக இருக்கும் என வலியுறுத்தினார்.
ஆண்டி பர்ன்ஹாமின் Andy Burnham)தலைமையுடன் பிரித்தானிய அரசியலில் புதிய கட்டம் தொடங்கவுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.












