அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நிலவி வந்த தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக “முடிவுக்கு வந்துவிட்டது” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஈரானிய இலக்குகள் மீது அமெரிக்க இராணுவம் ஏழாவது இரவாகவும் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
அமெரிக்கப் படைகள் இந்தத் தாக்குதல்களுக்காகப் அதிநவீன போர் விமானங்கள், வான்வழி ட்ரோன்கள் (Drones), போர்க்கப்பல்கள் உள்ளிட்ட பல்வேறு இராணுவக் கட்டமைப்புகளைப் பயன்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தத் தாக்குதல்கள் தொடர்பாக அமெரிக்க மத்திய கட்டளையகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
“எங்கள் படைகள் ஈரானின் முக்கிய கண்காணிப்பு தளங்கள், இராணுவ தளவாட உள்கட்டமைப்புகள், நிலத்தடி ஆயுதக் கிடங்குகள் மற்றும் கடல்சார் பாதுகாப்புத் திறன்களை இலக்கு வைத்துத் துல்லியமான தாக்குதல்களை நடத்தியுள்ளன.”
அமெரிக்காவின் இந்தத் தொடர் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், குவைத் உள்ளிட்ட அந்தப் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது தாங்கள் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் உரிமை கோரியுள்ளது.
ஈரானின் இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, தங்கள் நாட்டு வான் பாதுகாப்புப் படையினர் களமிறக்கப்பட்டு, “பகைமைமிக்க ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு முறியடித்துள்ளதாக” குவைத் இராணுவம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஒரே இரவில் தங்கள் நாட்டின் வான்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த ஈரானின் 10 ஏவுகணைகளைத் தடுத்து அழித்துள்ளதாக ஜோர்தான் இராணுவம் அறிவித்துள்ளது.
இந்தத் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக ஜோர்தான் எல்லைக்குள் எந்தவொரு உயிர்ச்சேதமோ அல்லது பொருள் சேதமோ ஏற்படவில்லை என்றும் அந்நாட்டுப் பாதுகாப்புத் தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரானின் இந்த நேரடி மோதல் போக்கு, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஒரு முழு அளவிலான போராக வெடிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.













