அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் முறைப்பாடுகளை ஆராயந்து வருகின்ற இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, இன்றைய தினமும் வாக்குமூலங்கள் பதிவு செய்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் ஜி.புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
விசாரணை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளிடம் இன்றைய தினமும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சுரேஷ் சலே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டிருந்த போது, அவர் முறையற்ற நடத்தைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறி அவரது உறவினர்களால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் சுரேஷ் சலே தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைக்கூடத்தையும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் விசேட சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
இதன்போது, அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சாதாரண சிறைக்கூடமொன்றிலேயே தடுத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளதுடன், அங்கு போதிய காற்றோட்டம் இல்லாமை உள்ளிட்ட பல அடிப்படை குறைபாடுகளும் அவதானிக்கப்பட்டுள்ளன.
இந்த சோதனையின் போது கண்டறியப்பட்ட குறைபாடுகள், தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கு ஆணைக்குழுவினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், சுரேஷ் சலே தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைக்கூடத்துக்கு அருகில் உள்ள மற்றுமொரு சிறைக்கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏனைய கைதிகள் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளிடமிருந்தும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த விசாரணை நடவடிக்கைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களப் பணியாளர்களிடம் இருந்து மேலும் பல வாக்குமூலங்களைப் பெற எதிர்பார்ப்பதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சுரேஷ் சலேவுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் தொடர்பாக தாங்கள் கண்காணித்து வருவதாக மனித உரிமைகள் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.













