முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனும், கடற்படையின் முன்னாள் அதிகாரியுமான யோஷித ராஜபக்ஷ இன்று ( 17) காலை இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்யும் உத்தியோகபூர்வ ஆணைக்குழுவின் (CIABOC) முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.
ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்டிருந்த விசேட அழைப்பாணைக்கு அமைவாகவே அவர் இன்று காலை விசாரணை அதிகாரிகளின் முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.
யோஷித ராஜபக்ஷவிடம் உள்ள சொத்து விபரங்கள் மற்றும் நிதி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பாக ஆணைக்குழுவிற்குப் பெறப்பட்ட சில முறைப்பாடுகள் குறித்து வாக்குமூலம் பெறுவதற்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவினரால் அவரிடம் நீண்ட நேரம் வாக்குமூலம் பதிவு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தமக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், ‘சதித்திட்டம்’ என்ற குற்றச்சாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியாது எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி யோஷித ராஜபக்சவினால் சமர்ப்பிக்கப்பட்ட சீராய்வு மனு நேற்று (16) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முழுமையான விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பின்னணியில், இன்று அவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளமை அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்த மேலதிக விபரங்கள் மற்றும் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.













